ஆர்எஸ்எஸ் டூ ஜார்க்கண்ட் ஆளுநர்.. தமிழ்நாட்டில் தாமரை மலர உழைத்த சிபி ராதாகிருஷ்ணனின் குட்டி ஸ்டோரி
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
டெல்லி: தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்பியுமான சிபி ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். வாஜ்பாய் காலத்திலிருந்து பாஜகவின் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வந்த சிபி ராதாகிருஷணன் யார்? அரசியலில் அவர் செய்தது என்ன? விரிவாக காண்போம்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் அம்மாநிலத்தில் தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை ஆளுநராக நியமித்து இருக்கிறது மத்திய அரசு. தமிழ்நாடு பாஜகவில் இருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன், இல கணேசனின் வரிசையில் இவரும் இணைந்துள்ளார்.

யார் இந்த சிபி ராதாகிருஷ்ணன்?
திருப்பூரை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு தற்போது 65 வயதாகிறது. தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி கல்லூரியில் படித்த இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்துத்துவா கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அந்த அமைப்பு மற்றும் ஜனசங்கத்துடன் 1973 ஆம் ஆண்டு முதலே தொடர்பில் இருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்து இருக்கிறார்.

2 முறை எம்பி
பாரதிய ஜனதா கட்சியின் ஆரம்பக்கட்ட நிர்வாகியான சிபி ராதாகிருஷ்ணன் 1998 ஆம் ஆண்டு கோவையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அதை தொடர்ந்து வணிகக் குழு மற்றும் அதன் துணைக் குழு உறுப்பினராகவும், உள்ளுர் பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராகவும், நிதி அமைச்சக ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

3 முறை தோல்வி
அதேபோல் 1999 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றார் சிபி ராதாகிருஷ்ணன். கடந்த முறை வகித்த நாடாளுமன்ற குழுக்களிலேயே அவர் மீண்டும் உறுப்பினராக இருந்தார். இதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை தோல்வியடைந்தார்.

பாத யாத்திரை
மத்திய சிறு குறு தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்த சி.பி.ராதாகிருஷணன், பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் அதை வளர்க்க பெரும் பங்காற்றினார். இதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை அவர் பாத யாத்திரையும் மேற்கொண்டார்.

திமுக, அதிமுகவுடன் கூட்டணி
2004 ஆம் ஆண்டில் திமுகவுடனான பாஜக கூட்டணி முடிவுக்கு வந்த காரணத்தால், அடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட கடின முயற்சிகளை அவர் மேற்கொண்டார். ஜெயலலிதா இதற்கு சம்மதித்து இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிறகும் பாஜக அதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியவில்லை.

பாஜகவுக்காக சிபி ராதாகிருஷ்ணனின் உழைப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். தொண்டரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராடியதற்காக கைது செய்யப்பட்டார் ராதாகிருஷ்ணன். தமிழ்நாட்டில் பாஜக தற்போது வரை 4 வது பெரிய கட்சி என்ற இடத்தை அடைய முடியாமல் தடுமாறினாலும், இப்போது அக்கட்சி அடைந்திருக்கும் பிரபலத்துக்கு சிபி ராதாகிருஷ்ணன் ஒரு முக்கிய காரணம்.

தமிழிசை, இல கணேசன் வரிசையில் சிபிஆர்
பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் உழைத்த அதன் தலைவர்களுக்கு கடந்த 9 ஆண்டு காலமாக மத்திய அரசு ஆளுநர் பதவி வழங்கி அலங்கரித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜன், இல கணேசன் உள்ளிட்டோர் ஆளுநராக அறிவிக்கப்பட்டனர். அந்த வரிசையில் தற்போது சிபி ராதாகிருஷ்ணனும் இணைந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications