முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ்.. யார் இந்த அஞ்சலி பிர்லா? நீட் முறைகேட்டால் மீண்டும் வெடித்த சர்ச்சை!
டெல்லி: அஞ்சலி பிர்லா, ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டிருப்பதில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுப்பி சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். யார் இந்த அஞ்சலி பிர்லா?
மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர். இதில், பாஜக கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இரண்டாவது முறையாக தொடர்ந்து லோக்சபா சபாநாயகர் ஆகியுள்ளார் ஓம் பிர்லா.

ராஜஸ்தானை சேர்ந்த ஓம் பிர்லா கடந்த 2003 முதல் 2013 வரை ராஜஸ்தான் மாநிலம் கோட்டா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். கடந்த 2014 தேர்தலில் பாஜக சார்பில் கோட்டா தொகுதியின் எம்.பியாக தேர்வாகி நாடாளுமன்றம் சென்றார். மீண்டும், 2019லும் எம்.பியாக தேர்வானார். அதன் பிறகு லோக்சபா சபாநாயகர் ஆனார். தற்போது மீண்டும் வென்று எம்.பியாகி, சபாநாயகர் ஆகியுள்ளார்.
இந்நிலையில், அவரை மையமாக வைத்து ஒரு சர்ச்சை சுழன்றடிக்கிறது. ஓம் பிர்லாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அகன்ஷா, இளைய மகள் அஞ்சலி. அவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடல் ஆக இருந்து வந்தார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். அஞ்சலி பிர்லா ஐ.ஏ.எஸ் தற்போது ரயில்வே அமைச்சகத்தின்கீழ் பணியாற்றி வருகிறார்.
அஞ்சலி பிர்லா, கோட்டாவில் உள்ள சோபியா பள்ளியில் தனது கல்வியை முடித்தார். அதன் பிறகு டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ராம்ஜாஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் (ஹானர்ஸ்) படித்தார்.
பின்னர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானது குறித்து அப்போது சர்ச்சைகள் கிளம்பின. மாடலிங் செய்து வந்த அஞ்சலி பிர்லா எப்படி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார் என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அப்போது பதிலளித்த அஞ்சலி பிர்லா, “யுபிஎஸ்சி தேர்வு மிகவும் நியாயமாக நடத்தப்படக்கூடியது. இதில் பின்வாசல் வழியாக தேர்ச்சிபெற முடியாது. குறைந்தபட்சம் இதனை மதியுங்கள். நாட்டு மக்கள் மீது என் தந்தை கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை எப்போதும் பார்த்து வந்ததால், இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே சிவில் சர்வீஸ் பணியில் சேர விரும்பினேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அண்மையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளும் வெளியாகின. அதைத்தொடர்ந்து நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு போன்றவை நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நீட் வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டு மாணவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இயக்குநர் மாற்றப்பட்டார். நீட் முதுநிலை தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இப்படியாக தொடர்ந்து நீட் தேர்வு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக பல மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படியான சூழலில்தான், லோக்சபா சபாநாயகரின் மகள் அஞ்சலி பிர்லா, முதல் முயற்சியிலேயே யூ.பி.எஸ்.சிதேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதம் கிளம்பியிருக்கிறது.
யுபிஎஸ்சி நேர்காணலில் பங்கேற்காமலேயே அஞ்சலி பிர்லா, ஐஏஎஸ் ஆக தேர்வானதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும், அஞ்சலி பிர்லா 2019 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொண்டார். UPSC முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
பின்னர் அவர் மெயின்ஸ் தேர்வில் 1750க்கு 777 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மேலும், நேர்காணல் சுற்றில் 275க்கு 176 மதிப்பெண்கள் பெற்றார். அவரது மொத்த மதிப்பெண்கள் 953. UPSC வெளியிட்ட ரிசர்வ் பட்டியலிலும் அவரது பதிவு எண் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications