தயங்கும் அசோக் கெலாட்.. காரணமே "அவர்" தானாம்! இடையில் வந்த சசி தரூர்! காங். தலைவர் தேர்தல் பரபர
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடலாம் எனச் சொல்லப்படும் நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சி இப்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு இருந்து வரிசையாக பல்வேறு கட்சித் தலைவர்களும் தொடர்ச்சியாக விலகி வருகின்றனர்.
இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைமை மீதான அழுத்தம் அதிகரித்து உள்ளது. சோனியா காந்தி இப்போது இடைக்கால தலைவராக உள்ள நிலையில், விரைவில் புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது.

காங்கிரஸ்
இதையடுத்து வரும் அக். 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உள்ளிட்டவை தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.

சசி தரூர்
இருப்பினும், ராகுல் காந்தி இந்த விஷயத்தில் இதுவரை மனதை மாற்றிக் கொள்ளவில்லை. இதையடுத்து ராஜஸ்தான் முதல்வரும் சோனியாவின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவரான அசோக் கெலாட்டை தலைவராக்க டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அசோக் கெலாட் இதற்குத் தயாராக இல்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. சசி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி
அசோக் கெலாட் அடுத்த வாரம் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இப்போதும் கூட அவர் ராகுல் காந்தி தான் தலைவராக வேண்டும் என விரும்புகிறாராம். ராகுலைத் தலைவர் தேர்தலில் போட்டியிடச் சம்மதிக்கவே அவர் இப்போது முயன்று வருகிறார். ராகுலைச் சம்மதிக்க வைத்துவிட்டால், அது கட்சிக்குப் பலமாக இருக்கும் என அவர் கருதுகிறார்.

அசோக் கெலாட்
பாஜகவின் "ஆபரேஷன் தாமரை" காரணமாக ஆட்சியை இழக்கும் சூழலை எதிர்கொண்டு அதில் இருந்து மீண்டு வந்தவர் மூத்த தலைவர் அசோக் கெலாட். கட்சியின் பொறுப்பை ஏற்குமாறு சோனியா காந்தியே கெலாட்டை பல முறை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், எங்குத் தலைவர் பொறுப்பை ஏற்றால் ராஜஸ்தான் முதல்வர் பொறுப்பு தனது போட்டியாளரான சச்சின் பைலட்டுக்கு சென்றுவிடுமோ என அவர் கவலைப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சச்சின் பைலட்
இதனிடையே சச்சின் பைலட் நேற்று டெல்லிக்கு வந்து இருந்தது முக்கியமாகப் பார்க்கப்பட்டது. தன்னை ராஜஸ்தான் முதல்வராக ஆக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே அவர் டெல்லிக்கு வந்து தலைமைக்கு நெருக்கமானவர்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. 2023 இறுதியில் அங்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஓராண்டிற்கு முன்பு தன்னை முதல்வராக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். இதற்காக முதல்வராக்க வேண்டும் என பைலட் நிறையக் காலமாகவே முயன்று வருகிறார்.

பிளான்
இருப்பினும், காங்கிரஸ் மூத்த தலைவரான அசோக் கெலாட் இதைத் தொடர்ந்து முறியடித்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் பொறுப்பைத் தான் ஏற்றால் சச்சின் பைலட்டிற்கு பதிலாகத் தனது ஆதரவாளர் ஒருவரை ராஜஸ்தான் முதல்வராக்க வேண்டும் என்பது திட்டம். அப்படி இல்லை என்றால், காங்கிரஸின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று, இரு பதவிகளையும் தக்க வைத்துக் கொள்ளவும் அவர் திட்டமிடுகிறாராம். அதேநேரம் கட்சியில் மற்றொரு பிரிவினர் சச்சின் பைலட்டிற்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications