முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
டெல்லி: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக புதிய பிரச்சார யுக்தியை கையில் எடுத்துள்ளது. வேறு சில யுக்திகள் வேலைக்கு ஆகாத காரணத்தால் மோடி பிரச்சார யுக்தியை மாற்றி உள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் தொடக்கத்தில் மோடி எதிர்க்கட்சிகளின் ஊழல்கள் என்று குறிப்பிட்டு பேசினார். முதல்வர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் தொடங்கி பலரின் கைதுகளை பற்றி பேசினார். கச்சத்தீவு பற்றி தமிழ்நாட்டில் மட்டுமின்றி வடமாநிலங்களில் பேசினார்.

காங்கிரஸ் ஒரு குடும்ப கட்சி என்று அதை குறிப்பிட்டு பேசினார். அந்தந்த மாநிலங்களில் இருக்கும் பெரிய மாநில கட்சிகளின் மீது வழக்கமாக வைக்கப்படும் புகார்களை குறிப்பிட்டு மோடி பேசி வந்தார். ஆனால் இது எதுவுமே தேர்தல் களத்தில் பெரிதாக எடுபடவில்லை.
மோடி பேச்சில் பொதுவாக ஒரு அழுத்தம் இருக்கும். ஆனால் மேற்கண்ட எல்லாம் அவர் கடந்த 10 வருடங்களாக பேசுபவை. இல்லையென்றால் கடந்த சில தேர்தல் பிரச்சாரங்களில் மீண்டும் மீண்டும் பேசியவை. இதனால் பாஜகவிற்கு பெரிதாக இந்த பிரச்சாரங்கள் பலன் கொடுக்கவில்லை.
அடித்து தூக்கிய காங்கிரஸ்: மாறாக காங்கிரஸ் ஜோடோ யாத்திரை, ஜாதி இடஒதுக்கீடு, பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, நீட் தேர்வு ஒழிப்பு என்று புதிய ரூட்டை கையில் எடுத்து ஸ்கோர் செய்தது. போதாதற்கு கெஜ்ரிவால் மனைவி, சோரன் மனைவி போன்றவர்களும் களமிறங்கி பாஜகவிற்கு செண்டிமெண்ட் பிரஷர் கொடுத்தனர்.
கடந்த 10 ஆண்டுகளில் எந்த லோக்சபா தேர்தலிலும் பாஜக இந்த அளவிற்கு சொதப்பியது இல்லை. பாஜகதான் தேர்தல் narrativeஐ உருவாக்கும். எதை பற்றி எல்லா கட்சிகளும் பேச வேண்டும் என்பதை பாஜகதான் முடிவு செய்யும். அதை சுற்றியே பிரச்சாரம் செய்யப்பட்டு கடைசியில் பாஜக நினைத்ததை சாதிக்கும்.
ஆனால் இந்த முறை அந்த பிரச்சார யுக்தி பாஜகவிற்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. பாஜக நினைத்ததை பெரிதாக செய்ய முடியவில்லை. ராகுலின் 1 நிமிட இன்ஸ்ட்டா வீடியோவிற்கு கிடைத்த பிரபலம் கூட சில பாஜகவின் முயற்சிகளுக்கு கிடைக்கவில்லை. அதிலும் செய்தியாளர்கள் துருவ் ரதி போன்றவர்கள் ஜெர்மனியில் இருந்து வெளியிட்ட வீடியோக்கள் பாஜகவை நிலைகுலைய வைத்தது.
பாஜகவின் புதிய ரூட்: இப்படி கடுமையான பிரச்சார யுக்திகளால் கிட்டத்தட்ட முதல் கட்ட தேர்தலில் பாஜக பின்னடைவையே சந்தித்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக புதிய பிரச்சார யுக்தியை கையில் எடுத்துள்ளது. வேறு யுக்திகள் வேலைக்கு ஆகாத காரணத்தால் மோடி பிரச்சார யுக்தியை மாற்றி உள்ளார்.
அதன்படி மீண்டும் பாஜக தனது "பேஸ்" யுக்தியான இஸ்லாமிய - இந்து பிரச்னையை கையில் எடுத்துள்ளது. அதிலும் மோடியே நேரடியாக இதில் பேச தொடங்கி உள்ளார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் ஆட்சியில் ஒருவர் தனது மத நம்பிக்கையைப் பின்பற்றுவது கடினம். அக்கட்சியின் ஆட்சியில் ஹனுமான் சாலிசாவைக் கேட்பது கூட குற்றமாகும் என்றும் காங்கிரஸைத் தாக்கினார். நீங்கள் உங்கள் மதத்தை பின்பற்ற முடியாது. ஹனுமான் பாடலை கூட பாட முடியாது. காங்கிரஸ் உங்களை கட்டுப்படுத்தும்.
உங்களின் செல்வத்தைப் பறித்து, 'தேர்ந்தெடுக்கப்பட்ட' சில மக்களுக்குப் பங்கிட காங்கிரஸ் ஆழமான சதி செய்கிறது என்ற உண்மையை நாட்டுக்கு முன் வைத்துள்ளேன். ஆனால் காங்கிரஸ் அதற்காக என்னை திட்டுகிறது. அசிங்கப்படுகிறது.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, காங்கிரஸின் இந்த வாக்கு வங்கி அரசியலை நான் அம்பலப்படுத்தினேன்; இது காங்கிரஸையும் அதன் இந்தியக் கூட்டணியையும் மிகவும் கோபப்படுத்தியது, அவர்கள் எல்லா இடங்களிலும் மோடியை தவறாகப் பேச தொடங்கியுள்ளனர். எனக்கு பிரச்சனை இல்லை. நான் உண்மையைத்தான் பேசுவேன்.
என் ஆட்சியில் தலித், பிசி, பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முடிவுக்கு வராது. அதை மாற்றவும் அனுமதிக்கப்படாது. ஆனால் காங்கிரஸ் இதை பற்றி பொய் சொல்கிறது என்று மோடி கூறினார்.
இன்று ஹனுமான் பாடல் பற்றி பேசிய மோடி இரண்டு நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் பொதுக்கூட்டத்தில் , நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள் என்று குற்றச்சாட்டினார். அன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
எழுந்த சர்ச்சை; இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை (தாலி) கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார்.
இதை வெறுப்பு பேச்சு என்று 17 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளனர். மெயில் மூலம் அவர்கள் இந்த புகார்களை பதிவு செய்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு உள்ளன.
பாஜகவின் முதல்கட்ட பிரச்சாரம் செல்ப் எடுக்காத நிலையில்தான் தற்போது மொத்தமாக பிரச்சார ஸ்டைலை மோடி மாற்றி அடித்து ஆட தொடங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications