விவகாரம் சிக்கலாகுதே! ராஜேந்திர பாலாஜியை திருச்சிக்கு ஷிப்ட் செய்தது ஏன்? கோர்ட் கேள்வி.. அரசு பதில்
டெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் உள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாகி இருந்த ராஜேந்திர பாலாஜி கடந்த வாரம் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. தமிழ்நாட்டு அரசு தரப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி இன்று வாதம் வைத்தார்.

ராஜேந்திர பாலாஜி கைது
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் வழக்கு இருக்கும் போதே தப்பி ஓடிவிட்டார். அப்படிப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவருக்கு ஜாமீன் வழங்குவது தவறான முன்னுதாரணமாக இருக்கும். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. ராஜேந்திர பாலாஜியை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் செயல்பட வாய்ப்பு உள்ளது என்று அரசு வாதம் வைத்தது.

ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன்
இதற்கு பதில் வாதம் வைத்த ராஜேந்திர பாலாஜி தரப்பு, இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த வழக்கில் எங்கும் நேரடியாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் வைக்கப்படவில்லை. அவரின் பெயரை வைத்து வேறு சிலர் ஏமாற்றி உள்ளனர். ராஜேந்திர பாலாஜிதான் ஏமாற்றினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. விஜய நல்லதம்பி போன்றவர்கள் ராஜேந்திர பாலாஜி பெயரை பயன்படுத்தி ஏமாற்றி உள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி ஜாமீன்
இந்த வழக்கில் ரவீந்திரன் என்பவர் ஏற்கனவே தனது வாக்குமூலத்தை மாற்றி மாற்றி பேசி உள்ளார். இதன் அர்த்தம் அவர் பொய் வாக்குமூலம் என்பதாகும். இதனால் போலீஸ் விசாரணை நடத்தும் வரை ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தரப்பு வாதம் வைத்தது. இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக நிறைய பேர் புகார் கொடுத்துள்ளனர். பலர் அவரின் பெயரை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளனர்.

பொய்யான கேஸ்
இதில் அவர் நேரடியாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறார். இதனால் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது சரியாக இருக்காது, என்று அரசு தரப்பு வாதம் வைத்தது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி தரப்பு, இதில் தனி மனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஒரு வாரம் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்குள் கைது செய்துள்ளனர் என்று ராஜேந்திர பாலாஜி தரப்பு வாதம் வைத்தது.

3 வாரம் காத்திருந்தோம்
இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு தரப்பு ராஜேந்திர பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்த போது அவர் கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாகி 3 வாரம் கழித்தே கைது நடைபெற்றுள்ளது. இதில் நாங்கள் அவசரப்படவில்லை என்று அரசு தரப்பு கூறியது. இதற்கு ராஜேந்திர பாலாஜி தரப்பு, ராஜேந்திர பாலாஜி தவறு செய்யவில்லை. அவரை வேண்டுமென்றே மதுரை சிறையில் இருந்து திருச்சிக்கு மாற்றினார்கள். வேண்டுமென்றே அலை கழிப்பதற்காக இப்படி செய்துள்ளனர். குற்றம் செய்யாதவர் ஏன் சிறையில் காலம் கழிக்க வேண்டும்? உடல்நிலை சரியில்லாத ஒருவரை போலீசார் துன்புறுத்துகின்றனர் என்று ராஜேந்திர பாலாஜி தரப்பு வாதம் வைத்தது.

நீதிமன்றம் கேள்வி
இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்.. ஏன் ராஜேந்திர பாலாஜியை திருச்சி சிறைக்கு கொண்டு சென்றீர்கள்? அவர் மதுரை சிறையில் இருந்து ஏன் மாற்றப்பட்டார். இந்த விவகாரம் சிக்கலாகிறது போல எங்களுக்கு தெரிகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு தரப்பு, மதுரை சிறையில்தான் முதலில் அடைக்க இருந்தோம். ஆனால் அங்கு உள்கட்டமைப்பு சரியில்லை.

திருச்சி சிறை ஏன்?
முன்னாள் அமைச்சர் என்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும். நிர்வாக ரீதியாக கொஞ்சம் சிக்கல்கள் இருந்தது. கொரோனா காலம் என்பதால் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இதன் காரணமாகவே அவர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். இதில் அலைக்கழிக்கும் வேலைகள் எதுவும் இல்லை என்று தமிழ்நாடு அரசு வாதம் வைத்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிபதிகள் 4 வாரம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications