சபாஷ்! 10 வயது சிறுவனுக்கு மோசமான பாதிப்பு.. களத்தில் இறங்கி ஆப்ரேஷன் செய்த திரிபுரா முதல்வர்
டெல்லி: திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா, தான் முதல்வராகப் பதவியேற்று நீண்ட காலத்திற்குப் பின்னர் 10 வயது சிறுவனுக்கு முதல்முறையாக ஆப்ரேஷன் செய்தார். இந்த ஆப்ரேஷன் வெற்றிகரமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் சாலை மார்க்கமாகச் செல்லும் போது விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் செய்திகளை நாம் பார்த்திருப்போம். நமது ஊரிலேயே கூட இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளன.
சில நேரங்களில் மருத்துவம் படித்த அரசியல் தலைவர்கள் அவசரம் காரணமாக நோயாளிகளுக்கு உதவும் சம்பவங்களும் நடந்துள்ளன. அன்புமணி ராமதாஸ், ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட பலரும் இப்படி பொதுமக்களுக்கு உதவியுள்ளனர்.

திரிபுரா
இதற்கிடையே திரிபுரா முதல்வர் அதையெல்லாம் விஞ்சும் வகையில் சிறுவனுக்காக அவரே ஆப்ரேஷன் செய்துள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியை அமைத்தது.. அங்கு அப்போது பிப்லப் குமார் தேப் முதல்வராகப் பதவியேற்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நீக்கப்பட்டு டாக்டர். மாணிக் சாஹா பதவியேற்றார்.. மருத்துவம் படித்துள்ள டாக்டர். மாணிக் சாஹா, அரசியல் பரபரப்புக்கு மத்தியில் சிறுவனுக்கு ஆப்ரேஷன் செய்துள்ளார். ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிவடைந்ததாகவும் சிறுவன் நலமாக உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரேஷன்
தீவிர அரசியலுக்கு வரும் முன்பு திரிபுரா முதல்வர் டாக்டர் சாஹா மிகப் பெரிய மருத்துவராக இருந்தார். இப்போது தீவிர அரசியலுக்கு வந்த பிறகு மீண்டும் ஆப்ரேஷன் செய்துள்ளார். 10 வயது சிறுவனுக்கு வாய்வழி சிஸ்டிக் புண் அறுவை சிகிச்சையை சாஹா வெற்றிகரமாகச் செய்தார். 5ஆம் வகுப்பு படிக்கும் அக்ஷித் கோஷ் இப்போது நலமுடன் இருப்பதாகவும் நாளை அந்த சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் முதல்வர் சாஹா தெரிவித்தார். மேலும், நீண்ட காலத்திற்குப் பிறகு ஆப்ரேஷன் செய்தது எப்படி இருந்தது என்பது குறித்தும் சில தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வித்தியாசம் தெரியவில்லை
இது தொடர்பாகத் திரிபுரா முதல்வரும் மருத்துவருமான சாஹா கூறுகையில், "எனக்கு எந்தவொரு வித்தியாசமும் தெரியவில்லை.. நான் இங்குப் பல ஆண்டுகளாக எப்படி மருத்துவம் பார்த்தேனோ.. மீண்டும் இப்போதே அதே போல தான இருந்தது.. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கூட அறுவை சிகிச்சை செய்யும் போது.. எனது கைகள் நடுங்கவில்லை என்று எனது நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். டாக்டர் சாஹா, ஏழு மாதங்களுக்கு முன்பு திரிபுரா முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, திரிபுரா மருத்துவக் கல்லூரியில் வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் துறையின் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன பிரச்சினை
பல்லைச் சுற்றியுள்ள திசுக்களில் இருந்து நீர்க்கட்டி உருவாகும் சமயங்களில் அது முழு தாடையையும் பாதிக்கும்.. இந்த நீர்க்கட்டிகள் அதிகப்படியான வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். சில சமயம் பாதிப்பு மோசமாக இருந்தால்.. கடுமையான தொற்று, உடைந்த தாடை மற்றும் பல் இழப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது. இவை புற்றுநோய் அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதும், இதனால் வாய்ப்பகுதியில் சிறு கட்டிகள் உருவாகத் தொடங்கும். எவ்வளவு சிகிச்சை எடுத்தாலும் கூட இதுபோன்ற கட்டிகள் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேநேரம் அறுவை சிகிச்சை என்பது மீண்டும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை கணிசமாகக் குறைக்கிறது.

எதனால் நீர்க்கட்டி ஏற்படுகிறது?
இந்த ஓடோன்டோஜெனிக் தாடை கட்டி பல் வளர்ச்சிக்குக் காரணமாக செல்கள் மற்றும் திசுக்களில் இருந்து உருவாகின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கான காரணங்கள் துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும் கூட.. அவை மரபணு மாற்றங்கள் காரணமாகவே ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் பல தீவிர பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பல் சென்சிடிவ்வாக இருப்பது, பல் வீக்கம், பற்களில் எரிச்சல் உணர்வு, பற்களுக்கு இடையில் இடைவெளி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.












Click it and Unblock the Notifications