உங்களுக்காக தமிழ்நாடு ஏன் பாலிசியை மாத்தணும்? விவாதத்தில் விளாசிய பிடிஆர்.. திரும்பி பார்த்த வடக்கு!
டெல்லி: அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவது தொடர்பான டிவி விவாத நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு எதற்காக கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டது கவனம் பெற்றுள்ளது.
Recommended Video
அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்க கூடாது. இலவசங்களை வழங்கும் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜகவை வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்த திமுக, ரிட் மனு மூலம் தங்களையும் மனு தாரராக சேர்த்துக்கொண்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு வைத்த வாதத்தில், இலவசங்களை நாங்கள் முற்றிலுமாக எதிர்க்கவில்லை. ஆனால் அனைத்து திட்டங்களையும் இலவசமாக வழங்க கூடாது. இது மக்களை பாதிக்கும் என்று தெரிவித்தது.
இந்த வழக்கில் நேற்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம்,இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது. அப்படி வழங்கும் கட்சிகளை தடை செய்வது பற்றி ஆலோசிக்க முடியாது.
அப்படி தடை செய்தால் அது ஜனநாயக விரோதம்.

உச்ச நீதிமன்றம்
மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவது என்பது ஒரு அரசின் கடமை. ஆனால் எதை எல்லாம் இலவசமாக வழங்கலாம். எந்த திட்டங்களை எல்லாம் இலவசமாக அளிக்கலாம் என்ற கேள்வி உள்ளது. இதில் எல்லா கட்சிகளும் கருத்து தெரிவிக்கலாம். மத்திய அரசும் இதில் கருத்து தெரிவிக்க வேண்டும். அனைத்து தரப்பையும் அறிந்த பின்னரே இதில் முடிவு எடுக்கப்படும். ஆகஸ்ட் 22ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

பிடிஆர்
இந்த வழக்கில் திமுகவும் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், நேற்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வடஇந்திய ஊடகங்கள் விவாதத்திற்கு அழைத்து இருந்தனர். அவரிடம் வடஇந்திய ஊடகங்கள் பல நேற்று விவாதம் செய்தன. நேற்று இதில் பிடிஆர் பேசிய விஷயங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. வடஇந்தியர்கள் பலர் பிடிஆரை பாராட்டி வருகிறார்கள். அவர் சொன்ன கருத்தையும் பாராட்டி வருகிறார்கள்.

இந்தியா டுடே
இந்தியா டுடே நிகழ்ச்சி தொகுப்பாளர் பிடிஆரிடம்.. இலவசங்கள் காரணமாக மக்களின் திறன் வளராது என்று மோடி கருதுகிறார். மக்களின் திறன் அப்படியே இருக்கும். இலவசங்கள் தற்காலிக தீர்வை மட்டுமே தரும். மாறாக திறனை, திறமையை வளர்க்க கூடிய நலத்திட்டங்களை அரசு செய்ய வேண்டும் என்று மோடி நினைக்கிறார் என்று குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த பிடிஆர்.. இதை சொல்பவர்களுக்கு முதலில் சட்ட ரீதியான அனுமதி இருக்க வேண்டும்.

என்ன சொன்னார்
இலவசங்களை கொடுக்க கூடாது என்று எங்காவது சட்டத்தில் சொல்லி இருக்க வேண்டும். அது இல்லை. அல்லது இப்படி சொல்பவர்கள் துறை வல்லுனர்களாக இருக்க வேண்டும். அதாவது பொருளாதார நோபல், பிஎச்டி.. அல்லது இந்த துறைகளில் நீங்கள் எங்களை விட சிறந்தவர் என்று சொல்வதற்கான ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் நீங்கள் எப்படி இதை செய்ய கூடாது என்று சொல்ல முடியும்.

விளாசல்
உங்களின் சாதனைகள், செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லாம். நீங்கள் கடனை அடைத்துவிட்டீர்கள், பொருளாதாரத்தை சரி செய்துவிட்டீர்கள், தனி நபர் வருமானத்தை உயர்த்திவிட்டீர்கள் என்றால் உங்கள் பேச்சை நாங்கள் கேட்கலாம். அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?

ஒன்றிய அரசு
ஒன்றிய அரசுக்கு அதிக நிதி தரும் மாநிலங்களில் நாங்கள்தான் மேலே இருக்கிறோம். நாங்கள் கொடுக்கும் 1 ரூபாய்க்கு 35 பைசா மட்டுமே எங்களுக்கு திரும்பி வருகிறது. எங்களிடம் இருந்து உங்களுக்கு இன்னும் என்ன தேவைப்படுகிறது? எந்த அடிப்படையில் உங்களுக்காக நாங்கள் எங்களின் பாலிசியை சரி செய்ய வேண்டும். மாற்ற வேண்டும்?, என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications