இந்தியாவுக்கு பாதிப்பு? எத்தியோபிய எரிமலை வெடித்து சிதறியதால்.. மொத்தமாக கிளம்பிய சாம்பல் மேகங்கள்
எத்தியோப்பியா: கடந்த சில நாட்களுக்கு முன்பு எத்தியோப்பிய எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது. சுமார் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த அந்த எரிமலை மிகப் பெரியளவில் சாம்பல் மேகங்களை வெளியிட்டுள்ளது. அந்த சாம்பல் மேகங்கள் இப்போது இந்தியாவுக்கு மேல் போகும் நிலையில், அதனால் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
பூமியில் இருக்கும் பல ஆயிரம் எரிமலைகள் அமைதியாகவே இருக்கும். சில நேரங்களில் பல நூறு ஆண்டுகள் கூட அவை அப்படியே அமைதியாக இருக்கும். திடீரென நாம் எதிர்பாராத நேரத்தில் வெடித்துச் சிதறும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள ஹெய்லி கூப்பி என்ற எரிமலை சமீபத்தில் வெடித்துச் சிதறியது.

எரிமலை வெடிப்பு
சுமார் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடித்துள்ளது. அந்த எரிமலையில் இருந்து மிகப் பெரியளவில் சாம்பல் மேகங்கள் பரவியது. இந்த எத்தியோப்பிய எரிமலை சாம்பல் மேகங்கள் நேற்று மாலை இந்தியாவுக்குள் நுழைந்தது. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைத் தாண்டி, அது இந்தியாவிலும் புகுந்தது. அது தொடர்ந்து சீனாவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறைத் தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த வடக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஹெய்லி குப்பி எரிமலையிலிருந்து வெளியேறிய இந்த சாம்பல் மேகங்கள், அரபிக்கடல் வழியாக நேற்று இரவு குஜராத்தை வந்தடைந்து, நள்ளிரவில் டெல்லிக்குள் நுழைந்தது. ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு மேலேயும் இது பரவியது.
இந்தியாவில் சாம்பல் மேகங்கள்
இந்த எரிமலை சாம்பல் மேகங்கள், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் வழியாகச் சீனாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக வானிலை மைய தலைவர் மொஹபத்ரா குறிப்பிட்டார். கடல் மட்டத்திலிருந்து எட்டு முதல் 15 கிலோமீட்டர் உயரத்தில், மணிக்கு 150 கி.மீ வேகத்தில் இந்த சாம்பல் மேகங்கள் பயணித்து வருகின்றன.
இதன் காரணமாக இன்று அதிகாலை டெல்லியில் வானம் வழக்கத்தை விடச் சற்று கூடுதலாக இருண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு ஏற்கனவே மிக மோசமாக இருக்கிறது. இதனால் அங்கு ஏற்கனவே ஒர்க் ப்ரம் ஹோம் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாம்பல் மேகங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்குமோ என மக்கள் அஞ்சினர்.
இந்தியாவைப் பாதிக்குமா?
இருப்பினும், இந்த சாம்பல் மேகங்கள் டெல்லி காற்றின் தரத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் மொஹபத்ரா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இதில் அச்சப்பட எதுவும் இல்லை. வானிலை மையம் சார்பில் நாங்கள் எந்தவொரு ஆலோசனையையும் வெளியிடவில்லை. விமான நிறுவனங்களே ஆலோசனைகளை வழங்கியுள்ளன.
இந்த சாம்பலின் அடர்த்தி அதிகமாக இருந்தால், அது மேகங்களை உருவாக்கியிருக்கலாம். இருப்பினும், எரிமலை புகை மண்டலம் மிக அதிக உயரத்தில் இருப்பதால், டெல்லியின் காற்றின் தரத்தை இது எந்த விதத்திலும் பாதிக்காது என்றே நினைக்கிறோம். அதிக உயரத்தில் இருப்பதால் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
வெப்பம் மட்டுமே உயரும்
இந்த எரிமலை சாம்பல் மேகங்களால் வானம் மங்கலாகத் தோன்றும் என்றும் அவை கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பதால், சில மணி நேரம் மட்டுமே இதன் தாக்கம் இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், சாம்பல் மேகங்கள் ஒரு மேகமூட்டத்தைப் போலச் செயல்படுவதால், நகரங்களில் வெப்பநிலை மட்டும் சற்று உயரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மேகங்களில் பெரும்பாலும் எரிமலை சாம்பல், சல்பர் டை ஆக்சைடு மற்றும் சில பாறைத் துகள்கள் உள்ளன என்றும், இவை வானத்தை வழக்கத்தை விட இருட்டானதாக மாற்றும் என்பதால் விமான போக்குவரத்தைப் பாதிக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications