வரப்போகும் ஆபத்து? சீனாவில் பரவும் BF.7 அலையால் புதிய வகை கொரோனா பிறப்பெடுக்குமா? என்ன நடக்கும்?
டெல்லி: சீனாவில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா அலை காரணமாக புதிய வகை கொரோனாக்கள் உருவாக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
சீனாவில் காட்டுத்தீ போல கொரோனா பரவி வருகிறது. சீனா தற்போது தினசரி கொரோனா கேஸ் அப்டேட்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டது. சீனாவில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சீனாவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 24.8 கோடி பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது கிட்டத்தட்ட 18 சதவிகிதம் பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக சீனாவில் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சீனா
இந்த ஓமிக்ரான் கிளை வைரஸ் சீனாவையே முடக்கி உள்ளது. இந்த நிலையில் சீனாவில் பரவும் இந்த அதிக அளவு கேஸ்களால் புதிய வகை கொரோனா உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. பொதுவாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் செல்லும் போது அப்படியே செல்லாமல் கொரோனா வைரஸின் புரோட்டின்களில் லேசாக மாற்றம் ஏற்படும். அதாவது ஏ என்ற நபரிடம் இருந்து பி என்ற நபருக்கு கொரோனா செல்லும் போது அதன் புரோட்டினில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

கொரோனா
கொரோனாவின் புரோட்டின் இப்படி மாற்றம் அடைவதால் அதன் குணங்களும், திறனும் மாற்றம் அடைகிறது. இதன் காரணமாக உருவாகும் புதிய பண்புகள் கொண்ட கொரோனாவே உருமாறிய கொரோனா என்று அழைக்கப்படும். இதை வேரியண்ட் என்று அழைப்பார்கள். பல புதிய வகை கொரோனா வைரஸ்கள் தோன்றுவதால் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் புதிய கொரோனா அலைகள் தோன்றி வருகின்றன. இப்படி பல்வேறு வகையான கொரோனா வைரஸ் வகைகள் உலகம் முழுக்க பரவி வருகின்றன. ஒரு வகையான கொரோனா இன்னொரு வகையாக உருமாற்றம் அடைந்து முன்பை விட ஆபத்து அதிகமானதாகவோ, ஆபத்து குறைவானதாகவோ மாறி மக்களிடையே பரவி வருகிறது. கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே அது பல்வேறு வகைகளாக உருமாறிக் கொண்டுதான் இருக்கிறது.

வேரியண்ட்
இந்த வேரியண்ட்களை கிரேக்க எழுத்துக்களில் அழைப்பார்கள். ஏற்கனவே ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பல வகை கொரோனா உள்ளது. அந்த வகையில்தான் தற்போது ஓமிக்ரான் பரவிக்கொண்டு இருக்கிறது. சீனாவில் பரவுவது ஓமிக்ரான் வைரஸ்தான். ஆனால் ஓமிக்ரானிலேயே லேசாக மாற்றம் அடைந்த கிளை வகையான BA5.2 மற்றும் BF.7 சீனாவில் அதிகமாக பரவி வருகிறது. சீனாவில் மட்டும் ஓமிக்ரானின் 130 வகையான கிளை வைரஸ்கள் பரவி வருகிறது.

கிளை வைரஸ்கள்
இப்படி கிளை வைரஸ்கள் அதிகம் பரவ பரவ அவை அப்படியே புதிய ஒரு வேரியண்ட்டை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. மேலே குறிப்பிட்டது போல இந்த கிளை வைரஸ்கள் மேலும் மேலும் உருமாறி, திடீரென ஸ்பைக் ப்ரோட்டின்களில் உருமாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் அது புதிய வகை கொரோனாவை உருவாக்கும் அபாயம் உள்ளது. இந்தியாவில் தற்போது சீனாவின் அலையால் பெரிய பாதிப்பு இல்லை.

சீனா அலை
இந்தியாவிலும் 6 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா ஏற்பட்டுள்ளது. அதில் 4 பேர் நவம்பர் மாதத்திற்கு முன்பே குணமடைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 196 பேர் புதிதாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது ஆக்டிவ் கேஸ்கள் 3,428 ஆக உள்ளது. ஆனால் சீனாவில் புதிய வகை உருவானால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது இந்தியாவில் இதுவரை பரவாத அல்லது உலகில் இதுவரை பரவாத ஒரு வகை கொரோனாவை உருவாக்கினால் அது மீண்டும் புதிய அலையை உருவாக்கும் அபாயம் உள்ளது.












Click it and Unblock the Notifications