ராமதாஸ் அவர்களே.. 20 ஆண்டுகளுக்கு முன்பு பேசுனீங்கனு ஞாபகம் இருக்கா? தருமபுரியில் ஸ்டாலின் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: 20 ஆண்டுகளுக்கு முன்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதை சுட்டிக்காட்டி, பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள பாமகவை கடுமையாக விமர்சித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில், தருமபுரி மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் ஆ.மணி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துப் பேசினார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸை மிகவும் கடுமையாக விமர்சித்துப் பேசினார் ஸ்டாலின்.

Stalin slams PMK founder Ramadoss by pointing out his old speech

சமத்துவம் என்றால், கிலோ என்ன விலை?: ஸ்டாலின் பேசுகையில், "பாஜக என்பது சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டும் கட்சி! சமத்துவம் என்றால், கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி! நம்முடைய நாட்டை மத, இன, சாதி, மொழி அடிப்படையில் பிளவுபடுத்திக் குளிர்காய வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் பா.ஜ.க. அப்படிப்பட்ட, பா.ஜ.கவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை, சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உண்டு!

ஆனால், நான் பெரிதும் மதிக்கும் சமூகநீதி பேசும் டாக்டர் ராமதாஸ் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும்! சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.கவுடன் சமூகநீதி பேசும் அய்யா ராமதாஸ் அவர்கள் எப்படி கூட்டணி வைத்தார் என்பது, ஏதோ தங்கமலை ரகசியமெல்லாம் கிடையாது... இந்த தருமபுரி மக்களுக்கு நன்றாகவே தெரியும்! அவர் ஏன் மனதில்லாமல் அங்குச் சென்றிருக்கிறார் என்று உங்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் கட்சியினருக்கும் தெளிவாகத் தெரியும்! இதற்குமேல் நான் விளக்கமாகச் சொல்ல விரும்பவில்லை!

அண்ணாவின் நீதியே என் சாதி: மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின - பழங்குடியின மக்களின் சமூகநீதியைக் காப்பாற்றும் அரசை ஒன்றியத்தில் அமைக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியை வலுவாக அமைத்திருக்கிறோம். அந்த வகையில், இந்தியா கூட்டணி, மக்களின் நலனுக்காக - மக்களுக்காகவே பாடுபடும் கட்சிகளின் கூட்டணியாக கம்பீரமாக உங்களுக்காகக் களத்தில் போராடுகிறோம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கடி கூறுவார்... "எனக்கென்று சாதிப்பெருமை கிடையாது. மிகமிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எனக்கென்று குடும்பப் பாரம்பரியம் கிடையாது. ராவ் பகதூர், திவான் பகதூர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறும் பெருமை எனக்கில்லை. கல்லூரிப் பட்டம் எனக்கில்லை. நான் புகுந்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியும் - காஞ்சிக் கல்லூரியும்தான்! நான் பட்டம் பெறாதவன் என்றாலும், பகுத்தறிவுப் பணியாளன்! சாதிப்பெருமை இல்லை என்றாலும் அண்ணாவின் நீதியே என் சாதியென மதிப்பவன் நான்" என்று கூறுவார்.

திமுக சாதனைகள்: தன்னை ஒரு சாமானியன் என்று அறிவித்துக் கொண்டு, சாமானிய மக்களுக்காக ஆட்சி நடத்தினார் தலைவர் கருணாநிதி. 1969-இல் முதன்முதலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - ஆதிதிராவிடர் நலத்துறை என்று அந்த மக்கள் பயனடையத் தனித்தனியாகத் துறையை உருவாக்கியவர் தலைவர் கலைஞர்தான். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி, சமூகநீதிக்குப் புதிய பாதை அமைத்தார். கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். கல்வி, வேலைவாய்ப்புகளில் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்து, கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினர் இன்று முன்னேறி இருப்பதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.

மற்றொன்றையும் பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 18 விழுக்காடும் - பழங்குடியினருக்கு 1 விழுக்காடும் - இடஒதுக்கீடு வழங்கி, அவர்களின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருந்தவர் தலைவர் கருணாநிதிதான்!

1987ஐ மறந்திருக்க முடியாது: நம்முடைய திராவிட மாடல் அரசுதான், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாக அறிவித்தோம்! ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தைப் புதுப்பித்தோம். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, வளர்ச்சித் திட்டங்களுக்கு முறையாகச் செலவழிக்கப்படுவதைக் கண்காணிக்க "தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்டச் சட்டம்" கொண்டுவந்ததும் தி.மு.க. அரசுதான். இப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களைக் கல்வி, பொருளாதார மற்றும் சமூக நிலைகளில் உயர்த்த அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு கவனத்துடன் மேற்கொண்டு வருகிறது.

வன்னியர் சமுதாய மக்கள் 1987-ஆம் ஆண்டை மறந்திருக்க மாட்டார்கள்! தனி இடஒதுக்கீடு கேட்டுக் கடுமையான போராட்டம் நடந்த ஆண்டு அது! ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் தனி இடஒதுக்கீடு கொடுக்கவில்லை! தலைவர் கலைஞர் 1989-ஆம் ஆண்டு முதலமைச்சரானதும், ஆட்சிக்கு வந்த 43-வது நாளில் வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை கொடுத்தார். இந்த முப்பதாண்டு காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய இடஒதுக்கீடுதான் அது!

சொன்னதைச் செய்த பெருமை உண்டு: வன்னியர் சங்கத்தினர் மேல் போடப்பட்டிருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றார் தலைவர் கலைஞர்! 1987-ஆம் ஆண்டு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேர் குடும்பத்திற்கு, மூன்று லட்சம் ரூபாய் கருணைத் தொகை கொடுத்தவர் தலைவர் கருணாநிதி. இன்றைக்கும் அந்தக் குடும்பங்கள் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெறுகிறார்கள்.

சமூகநீதித் தியாகிகளான அவர்களைப் போற்றி மணிமண்டபம் கட்டப்படும் என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் வாக்குறுதி கொடுத்தேன். இன்றைக்கு விழுப்புரத்தில் அந்த மணிமண்டபம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது! விரைவில் திறக்கப்பட இருக்கிறது. சொன்னதைச் செய்த பெருமையுடன் நான் உங்கள் முன்னால் வாக்கு கேட்டு நிற்கிறேன்.

ராமதாஸுக்கு நினைவூட்டிய ஸ்டாலின்: இந்த நேரத்தில் சில பேர் மறந்துபோன, மறைக்க நினைக்கும் வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கோனேரிக்குப்பத்தில் நடந்த வன்னியர் சங்க வெள்ளிவிழா மாநாட்டிற்கு, தலைவர் கலைஞரை அழைத்தார் ராமதாஸ்! அய்யா ராமதாஸ் அவர்களே... அன்றைக்கு மேடையில் என்ன பாராட்டிப் பேசினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் மறந்தாலும் வன்னிய சமுதாய மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்! "1987-ஆம் ஆண்டுமுதல் இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் போராடினோம், 21 உயிர்களைப் பலி கொடுத்ததைத் தவிர ஒன்றும் நடக்கவில்லை. அன்றைக்கு இருந்த அ.தி.மு.க முதலமைச்சரைப் பார்க்கவே முடியவில்லை! ஆனால் கலைஞர் ஆட்சிக்கு வந்தார். வந்தவுடன் என்னை அழைத்து இடஒதுக்கீடு தந்த கலைஞர் அவர்களே! உங்களுக்கு நன்றி!

இந்த சமுதாயம் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மட்டும் 20 விழுக்காடு இடஒதுக்கீடு தரவில்லை என்றால், இங்கு மத்திய அமைச்சர் சொன்னதைப்போல், கூலி வேலை செய்துவிட்டு, ஓட்டு மட்டும் போடும் ஒரு சமுதாயமாக இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம் இருந்திருக்கும். அதை மாற்றிய பெருமை, கலைஞர் அவர்களையே சாரும்" என்று சொன்னீர்களே, அத்தகைய சாதனையைச் செய்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

மனசாட்சி இருந்தால்: கடந்த தேர்தலில் அ.தி.மு.க - பா.ம.க. கூட்டணி முறிந்ததும், அ.தி.மு.க.வும் - பா.ம.கவும் மாறி மாறி, அவர்கள் ஆட்சியில் வழங்கிய இடஒதுக்கீடு பற்றி, குற்றம் சொல்லுகிறார்களே? என்னவெல்லாம் பேசுகிறார்கள் என டி.வி.யில் பார்க்கிறோமே! அதையெல்லாம் இப்போது சொல்லி, இந்த மேடையின் கண்ணியத்தைக் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை!

இராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு, சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களும் - வன்னிய அடிகளார் அவர்களும் - சி.என்.ராமமூர்த்தி அவர்களும் கருணாநிதியைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தபோது, சென்னை ஹால்டா சந்திப்பில் சிலை அமைத்தார் தலைவர் கருணாநிதி. அந்த நிகழ்ச்சியில், அவருடன் சென்னை மேயராக இந்த அடியேனும் கலந்து கொண்டேன். எந்தச் சமூகமாக இருந்தாலும் அந்தச் சமூகத்தின் மேன்மைக்காகத் திட்டங்களைத் தீட்டித் தரும் சமூகநீதி இயக்கம்தான் தி.மு.க.

ஆனால் சமூகநீதி பேசும் மருத்துவர் ராமதாஸ், சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.கவுடன் கை கோத்த மர்மம் என்ன? பா.ம.க வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக்கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க! இது, மூத்த தலைவரான ராமதாஸுக்கு தெரியாதா? நான் மட்டும் இதைச் சொல்லவில்லை, மனசாட்சி உள்ள பா.ம.கவின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையோடு இருக்கிறார்கள்!" என காட்டமாக பேசியுள்ளார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+