என்ன தான் ஆச்சு நம்ம திண்டுக்கல்லுக்கு! ஆறே நாளில் 4 கொலைகள்! என்னப் செய்யப் போகிறது மாவட்ட போலீஸ்!
திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பேகம்பூரை சேர்ந்த ரவுடி இர்ஃபான் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் முகம் சிதைக்கப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், இன்று மீண்டும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் மொத்தம் 4 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த ரவுடி இர்ஃபான் இவர் தனது நண்பர் முகமது அப்துல்லா உடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்பென்சர் காம்பவுண்டிற்கு வந்துள்ளார்.

அப்பொழுது இவர்களை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் இர்ஃபான் முகம் சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முகமது அப்துல்லா அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தார்.
பின்னர் காவல்துறையினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் இர்பானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் படுகொலை குறித்த விபரம் கேட்டறிந்தார். படுகொலை செய்யப்பட்ட இர்ஃபான் மீது கொலை உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. குறிப்பாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு திமுகவை சேர்ந்த பட்டறை சரவணன் படுகொலையில் இர்ஃபான் முக்கிய குற்றவாளி ஆவார்.

இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள் இன்று மீண்டும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல் அருகே குடும்பத் தகராறில் தர்மராஜ் என்பவர் தனது சகோதரரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
25.09.24 அன்று காப்பிளியபட்டி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஹேம தயாள வர்மன், 26ஆம் தேதி வேடசந்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொருளாளர் மாசி, 28ஆம் தேதி பேகம்பூர் பகுதி சேர்ந்த பிரபல ரவுடி முகமது இர்பான் என, இன்று கூத்தம்பட்டியில் ரஞ்சித் என 6 தினங்களில் 4 படுகொலைகள் நிறைவேறிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திண்டுக்கல்லில் மாதத்திற்கு ஒரு கொலை என்ற அளவில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை இருந்தது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரதீப் நியமனம் செய்யப்பட்ட பிறகு சட்ட விரோத மது விற்பனை, போதைப்பொருள் விற்பனை ஆகியவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக ரவுடிகளை கண்காணித்து குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் குற்றப்பிரிவு போலீசார் பார்த்துக் கொண்டனர்.

மேலும் சில்லிங் எனப்படும் அதிகாலையில் டாஸ்மாக் மது விற்பனையும் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக பெயருக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் அதிகாலையில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுகிறது. மேலும் சொத்து தகராறு, ஆத்திரத்தில் கொலை போன்ற சம்பவங்களை தவிர்க்க முடியாது என்றாலும், பழிக்குப் பழி சம்பவங்களை நிச்சயம் ரவுடிகளை கண்காணிக்கும் போது கட்டுப்படுத்த முடியும். எனவே ஏற்கனவே பல மாவட்டங்களில் அமலில் இருக்கும் திட்டமான ரவுடிகளுக்கு தனித்தனி போலீசாரை நியமித்து கண்காணிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications