சுதந்திரம் கிடைச்சு 78 வருஷமாச்சு.. ரோடு கூட இல்ல! டோலி கட்டி தூக்கி சென்ற பெண் பலி.. கிராமமே சோகம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சின்னூர் மலைக் கிராமத்தில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக உடல் நலக்குறைவு ஏற்பட்ட 45 வயது பெண்ணை டோலிகட்டி சுமார் 5 கிலோமீட்டர் தூரம் தூக்கி கொண்டு வந்து 108 ஆம்புலென்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொண்டு சென்றனர். ஆனால் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலக அளவில் பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது. அதனால் அங்கு பல வசதிகள் கொட்டிக்கிடப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கொடைக்கானல் பகுதியில் மட்டும் தான் அந்த நிலை.

மேல் மலைப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்கள் பலவற்றுக்கு இன்று வரை சாலை வசதியும், மின்சார வசதியும் அறவே கிடையாது. அவசர காலங்களில் கூட கொடைக்கானல் அல்லது பெரியகுளத்துக்கு செல்ல கால்நடையாகவே பயணிக்க வேண்டும்.
அப்படிப்பட்ட பகுதிதான் வெள்ளக்கெவி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர்,பெரியூர்,சின்னூர் காலனி,கடப்பாறை குழி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாத காரணத்தினால் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இருந்து கரடு முரடான வனப் பகுதியினை கடந்து சென்றும் தங்களது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், மருத்துவமனையில் சிகிச்சை,அவசர கால தேவை உள்ளிட்ட இதர தேவைகளுக்கு பெரியகுளம் பகுதியை பயன்படுத்துவது வாடிக்கையாக வைத்துள்ளனர்.

மேலும் முறையான சாலை வசதி இல்லாத காரணத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட மக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை டோலி கட்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுமந்து கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதித்து வருகின்றனர். இதில் ஒரு சில சமயங்களில் உயிர் இழப்புகளும் ஏற்பட்டதாக இப்பகுதி கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் சின்னூர் காலனியை சேர்ந்த பழங்குடியினத்தை சேர்ந்த மாரியம்மாள்(45) என்ற பெண்ணிற்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் இந்த கிராமங்களுக்கு வந்து செல்லும் கல்லாறு மற்றும் குப்பாம்பாறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பெண்மணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அவர் வீட்டிலேயே முடங்கினார்.

இதனை தொடர்ந்து இன்று ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் கடந்த 8 நாட்களுக்கு பிறகு அவரது உறவினர்கள் டோலி மூலம் சுமார் 5 கிலோ மீட்டர் சுமந்து வந்து சின்னையபாளையம் என்ற இடத்தில் உள்ள சாலைக்கு கொண்டுவரப்பட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு சிசிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து இன்று அதிகாலை தேனி அரசு மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவரின் இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊரான சின்னூர் மலை கிராமத்திற்கு மீண்டும் டோலிகட்டி தூக்கி வந்து அவருக்கு இறுதி சடங்கு நடைபெற இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதாகவும், சாலை வசதி இல்லாமல் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த மாரியம்மாள் குடும்பம் குறித்து அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகளாகியுள்ள நிலையில், கொடைக்கானலின் மலைக் கிராமங்களான சின்னூர்,பெரியூர்,சின்னூர் காலனி,கடப்பாறை குழி ஆகிய பகுதிகளுக்கு இன்று வரை சாலை வசதி இல்லை. இதனால் டோலி கட்டியே பலரை சாலை வரை கொண்டு வர வேண்டியுள்ளதாகக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி இவர்களுக்கு விரைவில் சாலை மற்றும் இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள இரண்டு ஆறுகளில் துரிதமாக பாலங்கள் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications