படர்தாமரை உடலுக்கு கேடு..பாஜக தாமரை நாட்டுக்கே கேடு! பொய் சொல்வதில் ‘இவர்’ தான் NO-1.. கலகல கருணாஸ்
திண்டுக்கல்: "படர்தாமரை உடலுக்கு கேடு; ஆகாயத் தாமரை குளத்திற்கு கேடு; பிஜேபியின் தாமரை இந்திய நாட்டுக்கே கேடு" என திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் களத்தில் இறங்கி தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அது மட்டும் இன்றி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கருணாஸ்: அந்த வகையில் திமுகவுக்கு இந்த தேர்தலில் ஆதரவு தெரிவித்த நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரான கருணாஸ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி அணைப்பட்டி விருவீடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பாஜக தாமரை: பிரச்சாரத்தில் பேசிய கருணாஸ்,"ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார் வாய்ப்பில்ல ராஜா ஒருபோதும் வாய்ப்பில்லை. படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பிஜேபியின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு எனவே பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
பொய் சொல்லும் போட்டி: உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும் இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள் இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை என பேசினார். முன்னதாக மதுரையில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மக்கள் மீது அதிகாரத்தை திணிப்பது தான் பாஜகவின் அரசியல். சமூக நீதி மறுப்பதுதான் சனாதனம்.
தினமும் 10 பொய்: தமிழ்நாட்டில் சமூக நீதி என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ அதுதான் சனாதனம். ஆண்டாண்டு காலமாக கீழடியில் நமது வரலாற்றை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நம் தாய்மொழி தமிழ் மொழி திட்டமிட்டு பாஜகவால் அழிக்கப்படுகிறது. மக்களுக்கான எந்தச் செயலையும் செய்யாமல் தினமும் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பது பிரதமரின் செயல்பாடு அவருடைய திட்டம்" என கூறினார்.












Click it and Unblock the Notifications