திருப்பரங்குன்றமே தீரல.. திண்டுக்கல் பக்கம் வண்டியை திருப்பிய பாஜக! மலைக்கோட்டையில் அபிராமி அம்மன்?
திண்டுக்கல்: திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பேசப்படும் விவகாரமாக மாறி இருக்கிறது. மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் அதனை தொடர்ந்து அரசின் நகர்வுகளும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஸ்கோர் செய்த பாஜக அடுத்ததாக திண்டுக்கல் பக்கம் தனது பார்வையை திருப்பி இருக்கிறது. திண்டுக்கல்லின் புகழ்பெற்ற மலைக்கோட்டை உச்சியில் அபிராமி அம்மன் சிலையை வைத்து வழிபட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னோட்டமாக மலைக்கோட்டையை பார்வையிட்டு இருக்கிறார் பாஜக இளைஞரணி செயலாளரான எஸ்.ஜி.சூர்யா.
பல ஆண்டு காலம் அமைதியாக இருந்த திருப்பரங்குன்றம் விவகாரம் மீண்டும் வெடித்து கிளம்பி இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென மதுரையைச் சேர்ந்த இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
விசாரணையை தொடர்ந்து மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி மதுரை மாவட்ட நிர்வாகம் அதற்கு அனுமதி மறுத்தது. உடனடியாக அங்கு திரண்ட பாஜகவினரும் இந்து முன்னணியினரும் தொடர்ந்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதை அடுத்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எச். ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்
இது ஒருபுறம் இருக்க கோவில் நகரங்களை குறி வைத்து பாஜக களமிறங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பழனி, காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட கோவில் நகரங்கள் உள்ள தொகுதிகளை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தை அடுத்து, அடுத்த அதிரடியாக திண்டுக்கல் பக்கம் தனது பார்வையை பாஜக திருப்பி இருக்கிறது. அதுதான் திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்யும் விவகாரம்.

திண்டுக்கல் மலைக்கோட்டை
திண்டுக்கல் என்ற பெயர் வந்ததற்கு அதன் நடுவே இருக்கும் மிகப்பெரிய பாறை தான் காரணம். தலையணை போல இருப்பதால் திண்டு போன்ற கல் என்பது மருவி திண்டுக்கல் ஆனது என்பது வரலாறு. மேலும் திண்டுக்கல்லுக்கு வரலாற்றில் பத்மகிரி அல்லது திண்டிசுரம் என்ற பெயர்களும் உள்ளன அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துச் சென்றபோது விழுந்த ஒரு சிறு கல்தான் திண்டுக்கல் எனவும் சொல்லப்படுகிறது.

திப்பு சுல்தான்
திண்டுக்கல் மையத்தின் அமைந்துள்ள இந்த மலை மீது ஒரு மிகப்பெரிய கோட்டை இருக்கிறது. 1605 ஆம் ஆண்டு முத்துக்கிருஷ்ண நாயக்கர் இந்த கோட்டையை கட்டியதாக சொல்லப்படுகிறது. மலைக்கோட்டை கட்டப்பட்டபோது அதில் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. காலப்போக்கில் திப்பு சுல்தான் வருகைக்குப் பிறகு அவரது கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மலைக்கோட்டை வந்தது.
அபிராமி அம்மன் சிலை
பக்தர்கள் என்ற பெயரில் ஒற்றர்கள் வந்து செல்வார்கள் என்பதால் மலை மீது இருந்த அபிராமி அம்மன் பத்மகிரிஸ்வரர் சிலைகள் அடிவாரத்தில் உள்ள காளகத்தீஸ்வரர் கோவிலுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வெள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மலைக்கோட்டை சுதந்திரத்திற்கு பிறகு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தான் கடத்த சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள குளத்தை சுத்தம் செய்த போது அம்மனின் திரிசூலம் சுவாமி சிலைகள் மீட்கப்பட்டது.
பாஜக நடவடிக்கை
அப்போது இருந்து மலைக்கோட்டை மேல் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்து அமைப்புகள் கார்த்திகை தீபத்தை மலைக்கோட்டை மேல் இருக்கும் தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. தற்போது திருப்பரங்குன்றம் விவகாரம் பெரிதாகி இருக்கும் நிலையில் பாஜகவின் அடுத்த பார்வை திண்டுக்கல் பக்கம் விழுந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கார்த்திகை தீபம் கோரிக்கை
அதாவது திண்டுக்கல் மலைக்கோட்டை மேலே அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து, பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தை அறிவிக்க இருப்பதாகவும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மலைக்கோட்டை அடிவாரத்தில் தெப்ப உற்சவமும் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் மலைக்கோட்டை மேல் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எஸ் ஜி சூர்யா
தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுக்க முயற்சிதற்கும் பாஜக முதற்கட்டமாக பாஜக இளைஞரணி மாநில செயலாளரான எஸ்.ஜி சூர்யாவை திண்டுக்கல் அனுப்பி வைத்திருக்கிறது. திருப்பரங்குன்றம் செல்வதற்கு முன்பாக திண்டுக்கல் வந்த அவர் மலைக்கோட்டையை பார்வையிட்டதோடு அதன் வரலாறு குறித்த ஆவணங்களை சேகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஜனவரி மாதத்திற்குள் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை பாஜக தொடங்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications