எஸ்சினு சொல்லி எம்எல்ஏ ஒதுக்குறாரு.. இதுதான் சமூக நீதிக் கட்சியா? கொந்தளிக்கும் திமுக துணை சேர்மன்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பேரூராட்சியில் தான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனது வார்டு பணிகள் புறக்கணிப்படுவதாகவும், சேர்மன் பதவி தருகிறேன் என்று கூறி வேலை வாங்கிய வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் சாதி காரணத்தால் ஏமாற்றி விட்டதாக பேரூராட்சி திமுக துணைத் தலைவர் போராட்டத்தில் குதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பேரூராட்சி 2-வது தி.மு.க வார்டு கவுன்சிலராகவும் முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளராகவும் இருப்பவர் ஜீவா. இவர் எரியோடு பேரூராட்சி மன்ற துணைத் தலைவராகவும் உள்ளார்.

இந்தநிலையில் ஜீவா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேரூராட்சி நிகழ்ச்சிகளில் தன்னை புறக்கணிப்பதாகவும், உட்தீண்டாமை கடை பிடிப்பதாகவும் தனது வார்டில் நடக்கும் பணிகளை கூட தன்னிடம் தெரிவிப்பதில்லை என போர்க் கொடி தூக்கியுள்ளார்.
இந்நிலையில், தன்னை புறக்கணிப்பது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி செயல் அலுவலரிடம் கேள்வி எழுப்பிய ஜீவா, நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். முழுக்க முழுக்க திமுக வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜனின் பேச்சை கேட்டுக் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்த அவர், சமூக நீதி ஆட்சியில் தொடர்ந்து பட்டியலினத்தவர் மீது இவ்வாறு செயல்படும் திமுக வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் மீது தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்.
இதனையடுத்து அதிகாரிகளும், கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போராட்டத்தை கைவிட்டார். ஜீவாவின் போராட்டம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் ஒன் இந்தியா தமிழ் சார்பாக அவரிடம் பேசினோம். அப்போது பேசிய அவர்," தனது தொகுதியின் எம்எல்ஏவான காந்தி ராஜன் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடும் போது காந்தி ராஜனுக்கு பல வகைகளில் வேலை செய்தேன்.
தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் வந்த போது நீ தான் வேலை செய்ய வேண்டும், எரியோடு பேரூராட்சிக்கு உன்னை சேர்மன் ஆக்குகிறேன் என்றார். இதற்காக எனது சொந்த பணத்தை செலவு செய்து 15 வார்டுகளில் பத்து வார்டுகளில் திமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தேன். எனக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால்தான் நானும் எனது மனைவியும் போட்டியின்றி வெற்றி பெற்றோம். இதுவரை யாரும் அப்படி வென்றது கிடையாது. மேலும் ஒரே வார்டில் 3 முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இந்த நிலையில் பேரூராட்சி கிடைத்ததும் காந்தி ராஜன் செயல்பாடுகளில் மாற்றம் தெரிந்தது. அவரது உறவுக்கார பெண்ணை சேர்மன் ஆக்கிவிட்டார். இது குறித்து கேட்டபோது பொது பகுதியில் எஸ்சி-ஐ சேர்மன் ஆக்க முடியாது எனக் கூறினார். அப்போது மாவட்ட செயலாளரும் உடன் இருந்தார். இத்தனை நாள் நான் வேலை செய்த போது நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்று தெரியவில்லையா எனக் கூறிவிட்டு வெளியே வந்து விட்டேன்.
அதற்கு பிறகு எந்த நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைப்பதில்லை. அதிகாரிகளுக்கும் என்னை அழைக்கக்கூடாது என உத்தரவு போட்டு இருக்கிறார். துணைச் சேர்மன் என்ற முறையில் எந்த பணிகள் குறித்தும் எனக்கு தெரிவிப்பது கிடையாது. எனது வார்டில் அமைக்கப்பட்ட வாய்க்கால் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தும் என்னை அழைக்கவில்லை. இது தொடர்பாக ஊர் மக்களே என்னை அழைத்து தரம் இன்றி பணிகள் நடப்பதாக புகார் அளித்தனர்.
இது தொடர்பாக நான் கேட்ட நிலையில் அதிகாரிகளும் விளக்கம் அளிக்கவில்லை. மேலும் எனக்கு மிரட்டலும் வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். சமூக நீதி கட்சியான திமுகவில் இதுபோன்று நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்றார்.
திண்டுக்கல் திமுக ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மாவட்ட செயலாளராக ஐ.பெரியசாமி இருந்தார். அதற்கு பிறகு அவர் கட்சியின் துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தற்போதைய அமைச்சர் சக்கரபாணியும், பழனி எம்எல்ஏ செந்தில்குமாரும் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து எரியோடு ஜீவா நீக்கப்பட்ட அவர் வகித்து வந்த மாவட்ட துணை செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. அப்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற கொறடாவுமான சக்கரபாணி எம்.எல்.ஏ., சாதிய வன்மத்தோடு நடந்து கொள்வதாகவும், அவரை கண்டித்தும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஜீவாவை சாதிய வன்மத்தோடு சக்கரபாணி நீக்கியதாகவும் சாதிய அரசியல் செய்யும் அவருக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அந்த கண்டன போஸ்டர்களில் மேற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் என்பவரது பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு, மக்கள் முன்னேற்ற கழகம், தமிழர் விடுதலைக் களம் மற்றும் தேவேந்திர குல வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு ஆகிய பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களால் திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு ஜீவா கட்சியில் சேர்க்கப்பட்டாலும், பொறுப்பு வழங்கப்படாத நிலையில், தற்போது மீண்டும் எம்.எல்.ஏ காந்திராஜன் மீது புகார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications