ரெடி ஆகுது கொடைக்கானல்.. 5 நாட்கள் ஓய்வெடுக்கும் முதல்வர் ஸ்டாலின்.. டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை!
திண்டுக்கல்: முதல்வர் ஸ்டாலின் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் நிலையில் 5 நாட்களுக்கு டிரோன் கேமராக்கள் மற்றும் பலூன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் அரசியல் தலைவர்கள், ஜூன் 4ஆம் தேதி வரப்போகும் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே தேர்தல் காரணமாக பரபரப்புடன் பணியாற்றி வந்த அரசியல் தலைவர்கள், கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதை ஒட்டி குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா கிளம்பி வருகின்றனர். அந்தவகையில், ஓய்வின்றி தினமும் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், தேர்தல் முடிந்துள்ள நிலையில் கொடைக்கானல் செல்ல உள்ளார்.
வரும் ஏப்ரல் 29ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் கொடைக்கானல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 நாட்கள் அங்குள்ள தனியார் சொகுசு தங்கும் விடுதியில் தங்கி ஓய்வெடுக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் வருகையை ஒட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் கொடைக்கானல் வத்தலக்குண்டு சாலையில் பராமரிப்பு பணிகளும் தொடங்கியுள்ளன.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின், மாலத்தீவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 29ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார் ஸ்டாலொன். அங்கிருந்து கார் மூலம் வத்தலக்குண்டு பிரதான சாலை வழியாக கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளதாக தெரிகிறது.
கொடைக்கானலில் ஏப்ரல் 29 முதல் மே 4 வரை முதல்வர் ஸ்டாலின் ஓய்வு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வரின் வருகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஐஏஎஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் ஆகியோர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக இன்று கொடைக்கானலில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 2021ல் சட்டசபை தேர்தல் முடிந்த பின் முதல்வர் ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஒரு வாரம் தங்கினார். இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிந்து ஓய்வுக்காக அதே ஹோட்டலில் தங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வருகையால் கொடைக்கானலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கொடைக்கானல் பகுதிகளில் ஏப்ரல் 29 முதல் மே 4ஆம் தேதி வரை டிரோன் கேமராக்கள் மற்றும் பலூன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி பிரதீப் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications