தோட்டத்தில் நடந்தது குத்தமா? பழங்குடி இளைஞர் மீது பாய்ந்த குண்டுகள்! சவேரியாரை தட்டி தூக்கிய போலீஸ்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் தோட்டத்தில் தொடர்ந்து பழங்களை பறித்ததாக, தோட்டத்தில் நடமாடிய இளைஞரை கள்ள துப்பாக்கியால் சுட்ட விவசாயியை போலிசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த விவசாயியான சவேரியாரை திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, தாளக்கடை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் வெள்ளையன் (18). இவர் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். இந்நிலையில் திண்டுக்கல் அடுத்துள்ள தவசிமடையை சேர்ந்த சவேரியார் (வயது 65) சிறுமலை, தாளக்கடை பகுதியில் சொந்தமாக தோட்டம் வைத்துள்ளார்.

இவருக்கும், வெள்ளையன் அடிக்கடி சவேரியார் தோட்டத்தில் பழங்களை திருடி செல்வதாகவும், இதனால் இரு குடும்பத்தின் இடையே முன்பகை இருந்துள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் சவேரியார் தோட்டத்தின் வழியாக நேற்று முன் தினம் இரவு 3 மணிக்கு வெள்ளையன் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சவேரியார் தான் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை வைத்து வெள்ளையனை சுட்டுள்ளார். இதில் தலை, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் வெள்ளையனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த வெள்ளையனை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த வெள்ளையனை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சவேரியாரை தேடி வந்தனர். மேலும் விவசாயிக்கு கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது எனவும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் அருகே தலைமறைவாக இருந்த சவேரியாரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம், துப்பாக்கிச் சூடு குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை மலைப்பகுதிகளில் வேட்டையாடுதலுக்காக அவுட்டு காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் தயாரிக்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. மேலும் பலரிடம் உரிமம் இல்லாத துப்பாக்கிகளும் உள்ளது. இதனால் வனப் பகுதிகளில் அடிக்கடி சட்டவிரோத வனவிலங்கு வேட்டை நடந்து வருகிறது. கடந்த பல மாதங்களுக்கு முன்னதாக சிறுமலை பகுதிகளில் சோதனை நடத்திய போலீசார் ஏராளமான துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், பலர் காட்டுப் பகுதிகளில் தூப்பாக்கிகளை தாங்களாவே வீசிச் சென்றனர். ஆனாலும் இன்னும் பலரிடம் நாட்டு துப்பாக்கிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுமலை வனப்பகுதியில் காட்டுப் பன்றிகள், காட்டு மாடுகள் அதிகம் வசிப்பதால் பாதுகாப்புக்காக பலர் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளனர்.
ஆனால் பலர் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை இன்னும் வைத்திருபதாகக் கூறப்படும் நிலையில், இதுபோன்ற கள்ளத் துப்பாக்கிகளை இன்னும் வைத்துள்ளதாகவும், இதனாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாகக் கூறும் மக்கள், போலீசார் தொடர் சோதனை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுல்லாமல் இரவு நேரங்களில் வனப் பகுதியில் வன விலங்கு வேட்டையில் ஈடுபடும் நபர்கள் மீது வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications