நள்ளிரவில் டீ சாப்பிட ஆசை.. கோவையில் கல்லூரி மாணவர்கள் ஜாலி ரெய்டு.. உயிரை பறித்த எமன்
கோவை ஈச்சனாரி அருகே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கோவை ஈச்சனாரி அருகே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதினர்.இதில் கல்லூரி மாணவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஜோசப் என்பவருடைய மகன் அலெக்ஸ் ஜோசப் , இவருக்கு 20 வயதாகிறது. இவரது நண்பர் சல்மான்கான் இவருக்கும் 20 வயதாகிறது. சல்மான்கான் கொடைக்கானல் அனந்தகிரி 4-வது தெருவை சேர்ந்தவர் அஜ்மல்கான் என்பவரின் மகன் ஆவார்.
அலெக்ஸ் ஜோசப், சல்மான்கான் ஆகியோர் கோவை மதுக்கரை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு 3-ம் ஆண்டு படித்து வந்தார்கள். கோவை மதுக்கரை பகுதியிலேயே தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி படித்து வந்தனர்.

நள்ளிரவில் ஆசை
நேற்று அதிகாலை 2 மணி அளவில் அலெக்ஸ் ஜோசப், சல்மான்கான் ஆகிய 2 பேரும் டீ குடிப்பதற்காக தங்களது நண்பனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கோவை மலுமிச்சம்பட்டி பகுதிக்கு சென்றுள்ளார்கள். இருசக்கர வாகனத்தை அலெக்ஸ் ஜோசப் ஓட்டினார். சல்மான்கான் பின்னால் அமர்ந்து இருந்தார். இதையடுத்து 2 பேரும் மலுமிச்சம்பட்டியில் டீ குடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

வாகனம் விபத்து
கோவை-பொள்ளாச்சி ரோட்டில் ஈச்சனாரியை அடுத்த ஆஞ்சநேயர் கோவில் அருகே ஒரு வளைவில் இவர்கள் வாகனத்தை திருப்பி இருக்கிறார்கள். அப்போது இருசக்கர வாகனம்,கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியிருக்கிறது. கண் இமைக்கும் நேரத்தில் வாகனம் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

விபத்தில் மரணம்
இந்த கோர விபத்தில் இரண்டு மாணவர்களும் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கோவை மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை
இதையடுத்து மதுக்கரை போலீசார் விரைந்து வந்து கல்லூரி மாணவர்கள் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அத்துடன் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.











Click it and Unblock the Notifications