திண்டுக்கல் பூட்டை திறக்குமா பாமக.. திலக பாமா எதிர்கொள்ள போகும் பெரிய சவால்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் திலக பாமாவை பாமக இந்த முறை களம் இறக்கி உள்ளது. ஆனால் பாமக வேட்பாளர் திலக பாமா, இந்த தேர்தலில் எதிர்கொள்ள போகும் சவால்களை பற்றி இப்போது பார்ப்போம்..
தமிழ்நாட்டில் லோக்சபா வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

லோக்சபா தேர்தலில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக தலைமையில் ஒரு அணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிடுகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழகம், புதுவையில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் தொகுதியில் பாமக மாநில பொருளாளர் திலக பாமா போட்டியிடுகிறார். இனறு காலை திலகபாமா தனது ஆதரவாளர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியிருடன் சென்று திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரி பூங்கொடியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
யார் இந்த திலக பாமா? : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரான திலக பாமா, பாமகவில் மாநில பொருளாளராக பொறுப்பு வகித்து வருகிறார். மதுரையில் கல்லூரி படிப்பை முடித்தவர். தற்போது சிவகாசியில் வசித்து வருகிறார். 2016ம் ஆண்டு சிவகாசி சட்டமன்ற தேர்தலிலும், 2021ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் பாமக சார்பில் போட்டியிட்டார்.
கடந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் பாமக போட்டியிட்டது. கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி 7 லட்சத்து 46 ஆயிரத்த்து 523 வாக்குகள் பெற்றார். பாமக வேட்பாளர் ஜோதிமுத்து 2 லட்சத்து 7 ஆயிரத்து 551 வாக்குகள் மட்டுமே பெற்றார். திண்டுக்கல் தொகுதியில் கடந்த முறை பாமக பெரிய தோல்வியை தழுவி இருந்தாலும், மீண்டும் பாமக இந்த தொகுதியில் களம் இறங்கி உள்ளார்.
வன்னியர்கள் கணிசமாக வசிக்கும் திண்டுக்கல்லில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைத்த பாமக இந்த முறை, திண்டுக்கல்லை சொந்த ஊராக கொண்ட திலக பாமாவை களமிறக்கி உள்ளது. திண்டுக்கல் பூட்டை திறந்து கணக்கை தொடங்க தென் மாவட்டங்களில் முயற்சியாக பாஜக கூட்டணியில் திண்டுக்கல் லோக் சபா சீட்டை பாமக தலைமை கேட்டு வாங்கி போட்டியிருப்பதாக சொல்கிறார்கள் பாமகவினர்..
திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியின் பிரதான தொழில் என்ற விவசாயமும், தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. பூக்கள் மற்றும் காய்கறிகள் பழனி, ஒட்டச்சத்திரம் பகுதிகளில் காய்கறியும், திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதிகளில் பூக்கள் சாகுபடியும் அதிகம் நடைபெறுகிறது. திண்டுக்கல் நகரம் தோல் தொழிற்சாலைகள் உள்ள நகரமாக உள்ளது. கொடைக்கானல் சுற்றுலா தலமாகவும், பழனி ஆன்மிகத் தலமாகவும் இருக்கிறது.
சாதகங்கள்: கடந்த முறை ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுயில் திமுக வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை போட்டியிடவில்லை.. அதேபேல் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் நேரடியாக போட்டியிடவில்லை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் போட்டியிடுகிறது. இது ஒன்றுதான் பாமகவிற்கு கொஞ்சம் சாதமான விஷயம்.. இன்னொரு சாதகமான விஷயம் என்றால் திண்டுக்கல் தொகுதியில் பாமக இந்த முறை நிறுத்தியிருப்பது உள்ளூர் வேட்பாளர்.. அடுத்தாக சொல்ல வேண்டும் என்றால், அமமுக, பாஜக கூட்டணி... இந்த மூன்றும் பாமக வேட்பாளருக்கு ஓரளவு உதவியாக இருக்கும்..
சவால்கள்: அதேநேரம் திண்டுக்கல் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான ஆர்.சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். திமுக ஆதரவுடன் போட்டியிடுவதால் கண்டிப்பாக பாமக வேட்பாளருக்கு பெரிய சவாலாக இருக்கும்.. அதேபோல் அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். இருவரையும் வீழ்த்துவதுதான் பாமக வேட்பாளர் திலக பாமாவுக்கு பெரிய சவால் ஆக இருக்கும்..
2011 ஆண்டில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் பாமக போட்டியிட்டது. 2016 தேர்தலிலும் தனித்து களம் கண்டது பாமக. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டது. 2021 தேர்தலில் ஆத்தூர் சட்டமன்றத் தேர்தலிலும் பாமக களம் கண்டது. தொடர்ந்து தோல்வியை சந்தித்தாலும் திண்டுக்கல்லில் பாமக போட்டியிடுவது பலருக்கும் ஆச்சயர்மான ஒன்றாக உள்ளது. ஆனால் எப்படியாவது கணக்கை துவங்க வேண்டும் என்பதே பாமகவின் ஆசையாக உள்ளது.
திண்டுக்கல்லில் மாம்பழத்தை மட்டும் ஜெயிக்க வைய்யுங்கள்.. நான் திண்டுக்கல்லில் தோல் தொழில் நலிவடைவதை தவிர்க்கவும், தோல் தொழிற்சாலைகளால் ஏற்படக்கூடிய கழிவுகளால் சுற்றுப்புறச்சூழலையும் காப்பாற்றவும் உதவுவேன் என்கிறார் திலக பாமா.. தோல் தொழிற்சாலைகளும் எவ்வித சிக்கலும் இன்றி இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பூட்டு தொழில் நலிவடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திலக பாமா கூறுகிறார்.
கொடைக்கானல் பழங்குடியின மக்களுக்குத் தேவையான கல்வி, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்து கொடுப்பேன் என்றும். மல்லிகை பூ விவசாயத்தை காக்கும் வகையில் திண்டுக்கல் தொகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும், சின்னாளப்பட்டு சேலை நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நெசவு பூங்கா அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.. ஆனால் பாமக ஒருமுறை கூட திண்டுக்கல் நகரில் ஜெயித்தது இல்லை.. இந்த முறையாவது ஜெயிக்க வேண்டும் என்று பாமக முயற்சிக்கிறது.. கடும் சவாலான இங்கு மாம்பழம் வெற்றிக்கனியாக மாறுமா என்பதை அறிய ஜூன் 4ம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..












Click it and Unblock the Notifications