மூட்டை மூட்டையாய் பணம்.. பழனி கோவில் உண்டியலை திறந்ததும்.. மெய்சிலிர்க்க வைத்த பக்தர்களின் காணிக்கை
திண்டுக்கல்: உலகப் புகழ்பெற்ற அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் தைப்பூச திருவிழாவில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கை வரவு ரூ.3.31கோடியை தாண்டியது. மேலும் சுமார் அரை கிலோ தங்கத்தையும், 21 கிலோ வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையான கோயில் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தான். இந்த கோயிலுக்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.

பழனிக்கு என்றே ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசனம் செய்வார்கள். குறிப்பாக பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் முருக பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
அந்த காலக்கட்டத்தில நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பல நாட்கள் கூட்டம் அலைமோதும். அதேநேரம் மற்ற நேரங்களில் விஷேச நாட்களில் மற்றும் வெள்ளி, செவ்வாய்கிழமைகளில், ஞாயிறுகளில் பழனி முருகன் கோயிலில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகாலமாக நடந்தது.
தைப்பூச திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் கடந்த 11ஆம் தேதி மாலை தேரோட்டத்துடன் நிறைவு பெற்றது. தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்தனர். மலை அடிவாரத்தில் மயில் காவடி, இளநீர் காவடி, பால் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க யானை பாதை வழியாக மலை மீது அனுப்பி வைக்கப்பட்டு, சாமி தரிசனம் அளிக்கும் பக்தர்கள படிப்பாதை வழியாக கீழே அனுப்பப்பட்டனர். இந்நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் தைப்பூச திருவிழா காரணமாக குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது.
இதில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி நகைகள் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் பணத்தையும், நாணயங்களையும் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக் கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து பிரித்து எண்ணப்பட்டது. இன்றைய நாள் எண்ணிக்கை முடிவில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் 3 கோடியே 31 இலட்சத்து 92 ஆயிரத்து 776 ரூபாய் கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தால் ஆன வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

அதன் மூலம், தங்கம் 557 கிராமும், வெள்ளி 21 ஆயிரத்து 235 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1153ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவ தானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications