திண்டுக்கல் அருகே ஓடும் பஸ்ஸில் தாக்க முயன்ற கணவன்.. நொடியில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, மாமனாரின் இருசக்கர வாகனத்தை தனக்கு வாங்கி தரும்படி, மனைவியை கணவர் தாக்க முயன்ற போது, ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி சந்தனமாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவருக்கு 24 வயது ஆகிறது. தங்கப்பாண்டி நத்தம் அருகே கல்வேலிபட்டியில் உள்ள தனியார் குடோனில் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இதற்காக வேம்பார்பட்டியில் இருந்து கல்வேலிபட்டிக்கு தினமும் பேருந்தில் சென்று வந்தார்.

தங்கப்பாண்டி பேருந்தில் செல்லும் போது, கல்வேலிபட்டியை சேர்ந்த 17 வயதாகும் லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன்பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. கடந்த ஆண்டு 2 பேரும் கல்யாணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு இவர்கள் வேம்பார்பட்டியில் வசித்து வந்திருக்கிறார்கள். லட்சுமி 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் லட்சுமியின் தந்தை இருசக்கர வாகனம் ஒன்று வைத்துள்ளார். அந்த இருசக்கர வாகனத்தை, தனக்கு வாங்கி தரும்படி தங்கப்பாண்டி தனது மனைவியிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் லட்சுமி வாங்கி தர முடியாது என மறுப்பு தெரிவித்து வந்தாராம்.
இதுதொடர்பாக தங்கப்பாண்டி லட்சுமி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு தங்கப்பாண்டிக்கும், லட்சுமிக்கும் இடையே இருசக்கர வாகனத்தை மாமனாரிடம் இருந்து வாங்குவது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பலமுறை சண்டை போட்டும் தங்கபாண்டிக்கு பைக் கிடைக்கவில்லை.
இதனால் தங்கப்பாண்டி, கோபம் அடைந்து தனது மனைவி லட்சுமியை அவரது தந்தை வீட்டுக்கு கொண்டுபோய் விட முடிவு செய்தார். இதனையடுத்து 2 பேரும் வீட்டில் இருந்து புறப்பட்டு கோபால்பட்டிக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து நத்தம் செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறியிருக்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி சென்ற அந்த பஸ்சில் 15 பயணிகள் இருந்தனர். தங்கப்பாண்டியும், லட்சுமியும் பஸ்சின் பின்பக்க படிக்கட்டு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்திருக்கிறார்கள். கோபால்பட்டியை அடுத்த ஒத்தக்கடை என்ற பகுதியில் பஸ் போய் கொண்டிருந்தது. அப்போது பஸ்சுக்குள்ளேயே 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தங்கப்பாண்டி, பேருந்து என்று பாராமல் பொதுமக்கள் முன்னிலையில் தனது மனைவியை தாக்க முயன்றார். இதனால் லட்சுமி பயந்து போய் இருக்கையில் இருந்து எழுந்து, முன்பக்க இருக்கைக்கு வேகமாக செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக லட்சுமி தவறி சாலையில் விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கப்பாண்டி மற்றும் பயணிகள், டிரைவரிடம் உடனடியாக பஸ்சை நிறுத்துமாறு கூறியிருக்கிறார்கள். அதன்படி, பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து தங்கப்பாண்டி மற்றும் பயணிகள், சாலையோரம் விழுந்த லட்சுமியை மீட்டார்கள்.
அப்போது 6 மாத கர்ப்பிணியான லட்சுமி ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் மயங்கி கிடந்தார். பின்னர் அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதனிடையே லட்சுமியின் தந்தை பாலமுருகன், தனது மகள் சாவுக்கு தங்கப்பாண்டி தான் காரணம் எனக்கூறி நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் தங்கப்பாண்டியை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்னும் திருமண வயது கூட எட்டாத சிறுமியை திருமணம் செய்த தங்கப்பாண்டி மீது போக்சோ சட்டத்தின் கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . ஓடும் பஸ்சில் இருந்து கர்ப்பிணி பெண், கணவனின் மோசமான கோபத்தால்கீழே தவறி விழுந்து பலியான சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications