திண்டுக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளராக களமிறங்கும் நெல்லை முபாரக்.. எஸ்டிபிஐ அறிவிப்பு!
திண்டுக்கல்: அதிமுக கூட்டணி சார்பில் திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் நெல்லை முபாரக் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐஎம் கட்சியின் சச்சிதானந்தம் vs எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை முபாரக் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துவிட்டது. காங்கிரஸ் தவிர அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை முடித்து கூட்டணியை உறுதி செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

அதிமுக கூட்டணியில் தற்போது தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ, பார்வர்ட் ப்ளாக், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கீடு செய்து அதிமுக அறிவித்துள்ளது. இன்று மாலை இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது, இரண்டு கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதொடர்பாக அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி, நெல்லை முபாரக் கையெழுத்திட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக நெல்லை முபாரக் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணி சார்பில் நெல்லை முபாரக் திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை களம் காண்கிறார்.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாராளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் இணைந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கிறது. அதன்படி அஇஅதிமுக கூட்டணியில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
அதன்படி திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளராக கட்சியின் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முகம்மது முபாரக் அவர்களை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலாளர் அப்துல் சத்தார் அறிவிப்பு செய்தார். தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெகலான் பாகவி, யாமுகைதீன், மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், ராஜா உசேன், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ்.ஷஃபிக் அஹம்மது, பஷீர் சுல்தான், முகமது ரஷீத் மற்றும் சென்னை மண்டலத்திற்குட்பட்ட கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் சிபிஐஎம் கட்சியின் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். தற்போது அதிமுக கூட்டணி சார்பில் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் களமிறங்கி உள்ளார். பாஜக கூட்டணியில், திண்டுக்கல் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications