கொடைக்கானலில் பலத்த காற்று; மரம் விழுந்ததில் வாகனங்கள் சேதம்.. சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல தடை
திண்டுக்கல்: கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவியுள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் கனமழை பெய்தது.
இதனால் இன்றைய தினம் அந்த வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தால் கொடைக்கானலில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அதுபோல் மின்கம்பங்களும் சாய்ந்துவிட்டன.

மரங்களின் கீழ் இருந்த வாகனங்கள்
மரங்களின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், மரங்கள் முறிந்ததால் வேரோடு சாய்ந்தது. இந்த தொடர் மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக நகர் பகுதி நெடுஞ்சாலைத்துறை பகுதி, வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது ராட்சத மரங்கள் முறிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றது.

கொடைக்கானல் வனத்துறை
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். தொடர் மழை காரணமாக இன்று இந்த சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்படுவதாகவும், புயல் மழை குறைந்த உடன் இந்த சுற்றுலா இடங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் நகர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

ஊட்டியிலும் மழை
அது போல் ஊட்டியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள். அது போல் சென்னையில் கலங்கரை விளக்கம் பகுதிக்கு செல்லவும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. கடலூர் சில்வர் பீச் பகுதியிலும் மழை நீர் கரைகளில் சூழ்ந்துள்ளது.

வேரோடு சாய்ந்த மரங்கள்
பல இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. கடலோரத்தில் இருக்கும் மரங்கள் வேரோடு கடல் நீரில் இழுத்து செல்லப்பட்டன. திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடல்நீர் உள்வாங்கியதால் பொதுமக்கள் அத்துடன் காணப்படுகிறார்கள். இன்று மதியம் முதலே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். கோவளம் கடல் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஹோட்டல்கள் மூட அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் சிலர் கடைகளை திறந்து வைத்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications