திப்பு சுல்தான் அழிக்க முடியாத சனாதன தர்மத்தை திமுக அழித்துவிடுமா?.. கேட்கிறார் பாஜக அண்ணாமலை
திண்டுக்கல்: திப்பு சுல்தான் போன்றவர்களின் படையெடுப்பில் அழிக்கமுடியாத சனாதன தர்மத்தை திமுக அழித்துவிடுமா?" என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார். டெல்லி, பீகாரில் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல உத்திரப் பிரதேசம் ராம்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் கண்டனம் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், "சனாதனம் குறித்த அவதூறு கருத்துக்களுக்கு மத்திய அமைச்சர் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான என் மண் என் மக்கள் யாத்திரை நேற்று திண்டுக்கல் வந்து சேர்ந்தது. இந்த யாத்திரையில், "திப்பு சுல்தான் போன்றவர்களின் படையெடுப்பில் அழிக்கமுடியாத சனாதன தர்மத்தை திமுக அழித்துவிடுமா?" என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து X சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "இன்றைய மாலை #EnMannEnMakkal பயணம், முன்னொரு காலத்தில் திண்டீஸ்வரம் என்றழைக்கப்பட்ட, சேர, சோழ, பாண்டியர்களின் எல்லையாக விளங்கிய திண்டுக்கல் மாநகரில் மாண்புமிகு பாரதப் பிரதமரின் நல்லாட்சிக்குச் சாட்சியாகப், பெருந்திரளெனக் கூடியிருந்த மக்கள் மத்தியில் வெகு சிறப்பாக நடந்தேறியது. மாங்காய் பூட்டு, மணி பூட்டு, தொட்டி பூட்டு உள்ளிட்ட பல்வேறு வகையாகத் தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் திண்டுக்கல் பூட்டுக்கு 2019ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கியது நமது மத்திய அரசு.
திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள ஆள் உயரம் கொண்ட பூட்டு திண்டுக்கல் பூட்டு என்பது நமக்கெல்லாம் பெருமை. கடவுளுக்கே பூட்டு போட்டு பாதுகாப்பு தேவையா என்று திமுககாரர்கள் கேட்பார்கள். பாவம் செய்த திமுகவினரும் பரிகாரம் தேட கோவிலுக்கு வருவதால் தான் பூட்டு போட்டுப் பாதுகாக்க வேண்டியுள்ளது.
நிலவில் கால் பதித்துள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் மூன்றும் பெங்களூர் இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இவற்றுக்கான கட்டளைகளை பிறப்பிக்கக் கூடிய டெலிகமாண்ட் சாப்ட்வேர் (Telecommand Software) வடிவமைப்பாளர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்த்த விஞ்ஞானி கௌரிமணி ராமராஜ். நேற்று வெளியான நமது நாட்டில் தயாராகும் iPhone 15 launch iPhone 15ல் இஸ்ரோ கண்டுபிடித்த NAVIC சிஸ்டம் பொறுத்தப்பட்டுள்ளது.
வீரமங்கை வேலுநாச்சியாருக்கு அடைக்களம் கொடுத்தவர் சுதந்திர போராட்ட வீரரான விருப்பாச்சி கோபால் நாயக்கர் அவர்கள். திண்டுக்கல் விருப்பாச்சி பாளையத்தை ஆண்ட கோபால் நாயக்கரின் நினைவாக கோபால சமுத்திரக்கரையில் முழு உருவச் சிலை வேண்டும் என்ற திண்டுக்கல் மக்களின் கோரிக்கையை நமது ஆட்சியில் நிறைவேற்றுவோம். திப்புசுல்தான் காலத்தில் அழிக்கப்பட்ட திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்த மலைக்கோட்டையில் உள்ள கோவிலை புனரமைத்து மீண்டும் மக்கள் வழிபாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுப்போம். திப்பு சுல்தான் போன்றவர்களின் படையெடுப்பில் அழிக்கமுடியாத சனாதன தர்மத்தை திமுக அழித்துவிடுமா?
தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று திண்டுக்கல்லுக்கு வழங்கப்பட்டது. மதுரை மற்றும் நத்தம் இடையே போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க 7.3 Km, தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலத்தை 613 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதை நமது பாரத பிரதமர் இந்த வருடம் ஏப்ரல் மாதம் துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த 1159 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது நமது மத்திய அரசு. 242 கோடி ரூபாய் செலவில் திண்டுக்கல் பழனி பாலக்காடு ரயில் மின்சாரமயமாக்குதல் பணிகள் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு இந்த வருடம் ஏப்ரல் மாதம் நமது பாரத பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் 2050ஆம் ஆண்டுக்குள் ரயில்தடம் மின்சார மயமாக்குவோம் என்று சொல்கிறார்கள். இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 37,011 ரயில் கிலோமீட்டர் மின்சாரமயமாக்கி சாதனை படைத்துள்ளார் நமது பாரத பிரதமர். ஒட்டுமொத்த ரயில் தடங்களில் சதவீதம் இன்று மின்சார 90 மயமாக்கப்பட்டுள்ளது.
திமுக என்பது குறுநில மன்னர்களுக்கான குடும்ப ஆட்சி. ஊருக்கு ஊர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் பதவிக்கு வரவேண்டும் மற்றவர்கள் போஸ்டர் ஒட்டவேண்டும். திமுகவுக்கு தெரிந்தது, சாராயம் விற்போம், சனாதனத்தை ஒழிப்போம், தேர்தலுக்கு முன்பு பல்டி அடிப்போம். வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத ஊழல் திமுக கூட்டணியை விரட்டியடிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியைத் தொடரச் செய்வோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications