டிஎன்ஏ ஆதாரங்களை காட்டி தப்பிக்க முடியாது: பாலியல் குற்றவாளி தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மரபணு பரிசோதனையை மட்டுமே சாதகமான ஆதரமாக காட்டி தண்டனையிலிருந்து குற்றவாளிகள் தப்ப முடியாது என சிறுமி பாலியல் வழக்கில் கைதான நபர் 10 ஆண்டு சிறை எனும் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்துள்ளது.
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மூக்கன் என்ற முருகன் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் முருகன் மீது விராலிமலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
10 ஆண்டு சிறைத்தண்டனை
இதனைதொடர்ந்து இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் குற்றவாளியான முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
மேல்முறையீடு, தண்டனையை உறுதிச் செய்த உயர் நீதிமன்றம்

அந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி முருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார், அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றவாளி மீதான குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம் ஆகியுள்ளது, மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல்கொடுமை கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானத, இதுபோன்ற மிருகத்தனமான செயல்கள் குழந்தையின் மனதில் நீண்ட காலத்திற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தி, உடல், உளவியல் ரீதியாகவும் பாதிப்பை உண்டாக்குகின்றன. எனவே இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்வதாக தீர்ப்பளித்தது.
மரபணு சோதனை சாதகமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி முருகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், அந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பீலா திரிவேதி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் டி.என். ஏ சோதனையை காரணம் காட்டி வாதம் வைக்கப்பட்டது.
மனுதாரர் முருகன் தரப்பில், "இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட மரபணு பரிசோதனைகளில் தனக்கு எதிராக எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை, எனவே அதனை காரணமாக ஏற்று எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதோடு, வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டது.
வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம்
ஆனால், குற்றவாளி முருகன் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், டி.என்.ஏ பரிசோதனை மட்டும் சாதகமாக இருப்பதாகக்கூறி, அதனை மட்டுமே சாதகமாக குற்றவாளிகள் பயன்படுத்த முடியாது, ஏனெனில் சிறுமிக்கு ஏற்பட்ட காயங்கள் அது குறித்து மருத்துவ அறிக்கைகள், சாட்சியங்கள் ஆகியவை குற்றவாளிக்கு எதிராக வலுவாக இருக்கிறது,
10 ஆண்டு சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது
எனவே, இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்வதாகவும், குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். இதனால் பாலியல் குற்றவாளியான முருகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
