துபாயை மொத்தமாக புரட்டிப்போட்ட கனமழை.. "மேக விதைப்பு" காரணமா? தமிழ்நாடு வெதர்மேன் பரபர விளக்கம்
துபாய்: துபாயில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டி தீர்க்க மேக விதைப்பு காரணம் என்று தகவல் பரவிய நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
பாலைவன நாடான ஐக்கிய அமீரகத்தில் பெரும்பாலான காலம் வெயில் உச்சத்தில் தான் இருக்கும். வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் ஓரளவுக்கு மழையைக் கொண்டு வரவும் அந்நாட்டு ஆய்வாளர்கள் மேக விதைப்பு முறையைப் பின்பற்றுவார்கள்.

Cloud seeding எனப்படும் மேக விதைப்பு முறையைப் பின்பற்றினால் தான் மழை வரும் என்ற சூழல் தான் அங்கு இருந்தது. இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று முன்தினம் அங்கு மழை கொட்டி தீர்த்துள்ளது.
மழை: ஏப்ரல் 15, 16 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் முன்கூட்டியே எச்சரித்து இருந்தது. ஆனால், யாருமே இந்தளவுக்கு மழை பெய்யும் என்ற கனவிலும் பெய்யவில்லை. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை அங்கே ஒரே நாளில் பெய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்குப் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது.
இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் துபாயின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த வரலாறு காணாத மழை துபாய் மக்களின் வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப்போட்டுவிட்டது. எல்லா பக்கமும் மழை அடித்துத் தூக்கியதால் கார்கள் கூட மழைகளில் குப்பைகளைப் போல மிதந்து சென்றன. இது நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருந்தது என்பதையே காட்டுவதாக இருக்கிறது..
ஸ்தம்பித்த துபாய்: மேலும், உலகின் 2ஆவது பிஸியான ஏர்போர்ட் ஆன துபாய் விமான நிலையம் முழுமையாக நீருக்கு அடியில் சென்றது. இதனால் பல்வேறு சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. துபாய் மிக முக்கிய சர்வதேச ஏர்போர்ட் என்பதால் இதனால் பல ஆயிரம் விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல லட்சம் பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரேபியத் தீபகற்பத்தைக் கடந்து சென்ற ஒரு புயலே இந்த மழைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே செயற்கை மழை தான் இந்த பேரழிவுக்குக் காரணம் என்ற குரல்கள் இணையத்தில் எழுந்துள்ளன. இயற்கையில் மனதின் தலையிட்டு செயற்கை மழையை ஏற்படுத்தியதே இந்த பேரழிவுக்குக் காரணம் என்றும் இனிமேலாவது இதுபோன்ற தவறுகளை நாம் செய்யக்கூடாது என்றெல்லாம் இணையத்தில் பரவின. இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றாலும் கூட இந்த குரல்கள் பரவலாக எழுந்தன. வரும் காலத்தில் இந்த முறையைப் பயன்படுத்தவே கூடாது என்றெல்லாம் கூட கூறினர்.
வெதர்மேன் விளக்கம்: இதற்கிடையே இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார். துபாய் பெருமழைக்கு மேக விதைப்பு காரணம் இல்லை என்பதே அவரது கருத்தாகும். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் / துபாய் மழைக்கும் மேக விதைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேக விதைப்பு செய்யப்படுவதற்கு முன்பே தீவிர மழை பெய்யும் என்பதை பல்வேறு சர்வதேச வானிலை அமைப்புகள் எச்சரித்து இருந்தது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேக விதைப்பு காரணமா: மேக விதைப்பு என்பது குறிப்பிட்ட பகுதியில் மழையைப் பெய்ய மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். இதற்கு விமானத்தில் சென்று சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவார்கள். இதன் மூலம் மேகங்களில் இருக்கும் நீராவி நீராக மாறி மழையாகப் பெய்யும். இந்த தொழில்நுட்பத்தைப் பல ஆண்டுகளாக உலக நாடுகள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications