லைஃப் டைம் செட்டில்! லாட்டரியில் அடித்த 225 கோடி! ஐக்கிய அரபு அமீரகத்தில் மலையாளிக்கு அடித்த யோகம்?
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக மிகப்பெரிய லாட்டரி பரிசான சுமார் 225 கோடி ரூபாய் கேரளாவை சேர்ந்தவருக்கு அடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பெயர் அனில்குமார் என்று தகவல் வெளியாகி உள்ளது. வெற்றியாளரின் முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. டிக்கெட் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்த பிறகே இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. நம் அண்டை மாநிலமான கேரளாவிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. என்றாவது ஒரு நாள் நமக்கு அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என பலரும் லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறார்கள்.

லாட்டரி டிக்கெட் விற்பனை
ஐக்கிய அரபு அமீரகத்திலும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு அடிக்கடி பரிசு அடிக்கும் செய்திகளையும் பார்த்து இருப்போம். அந்த வகையில் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக மிகப்பெரிய லாட்டரி பரிசான 100 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 225 கோடி ரூபாய்) ஒருவருக்கு அடித்துள்ளது. அந்த அதிர்ஷ்டசாலி கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் என தகவல்
ஏனெனில் வெற்றியாளர் பெயர் அனில்குமார் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் வெற்றியாளரின் முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. டிக்கெட் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்த பிறகே இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.
லாட்டரியில் பங்கேற்க 18 வயதுக்கு மேற்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியிருப்பாளர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் என்பதால், வெற்றியாளர் எமிரேட்ஸில் வசிப்பவர் என்பது உறுதி செய்யபட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் இந்தப் பரிசை வெல்ல முடியாது. வெற்றியாளர் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், அதற்கான நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் லாட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
50 திர்ஹாமுக்கு வாங்கிய டிக்கெட்
அனைத்து உள் சோதனைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் பொது வர்த்தக கேமிங் ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்ட பின்னரே வெற்றியாளர் குறித்த தகவல்கள் வெளியிடப்படும். லக்கி டே குலுக்கலில், ஏழு எண்களும் சரியாகப் பொருந்தி இந்த பரிசை வெற்றியாளர் பெற்றுள்ளார். வெறும் 50 திர்ஹாம் மதிப்புள்ள டிக்கெட் மூலம் 225 கோடி பரிசு அடித்துள்ளது. இந்த லாட்டரி வெற்றியால் அனில்குமாரின் வாழ்க்கையே மாறிவிடும் என்பதில் ஐயம் இல்லை.
30 நாட்களுக்குள் வழங்கப்படும்
நாள்களில் இருந்து 7, 10, 11, 18, 25, 29 ஆகிய எண்களும், மாதங்களில் இருந்து 11 என்ற எண்ணும் பரிசை வென்றுள்ளன. இந்த ஜாக்பாட்டை வெல்வதற்கான வாய்ப்பு 8,835,372-ல் 1 ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட டிக்கெட் உரிமையாளர்களுக்கு ஜாக்பாட் கிடைத்தால், பரிசு சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும். இத்தகைய பெரிய பரிசுகளை வெற்றியாளர் நேரடியாக வந்து பெற வேண்டும். வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு 30 நாட்களுக்குள் பெரிய பரிசுத் தொகைகள் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications