திடீர் என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஷாக் ஆன தம்பதி.. கண்ணீருடன் வைத்த கோரிக்கை.. உடனே ஆர்டர்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின், திடீர் என்ட்ரியாக, விடுகளுக்குள் சென்று ஆதரவு திரட்டினார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திடீரென சில வீடுகளுக்குள் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார். அப்போது ஒரு முதிய தம்பதியர் வைத்த வேண்டுகோளைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், "தைரியமா இருங்க.. நான் பாத்துக்கிறேன்" என உறுதியளித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவுபெறும் நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக நடந்து சென்று வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்.
வாக்காளர்களை நேரில் சந்தித்து திமுக வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு திரட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று மாலை 6 மணியோடு பிரச்சாரம் நிறைவு பெறும் நிலையில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சூறாவளி பரப்புரை
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக செய்த திட்டங்களை விளக்கி பிரச்சாரம் செய்தார். அப்போது கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியான, மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்து பேசினார். மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்குவது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நடந்து சென்று
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் திறந்த வேனில் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கி நடந்து சென்று தெருக்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும், சில வீடுகளுக்கு உள்ளேயும் சென்று வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களையும் பெற்றார் முதல்வர் ஸ்டாலின்.

இன்ப அதிர்ச்சி
அப்படி, ஒரு வீட்டுக்குள் நுழைந்து வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின், அவருடன் திமுக அமைச்சர்கள், ஈரோடு கிழக்கு வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் ஆகியோரும் சென்றனர். அந்த வீட்டில் இருந்த தம்பதியர், திடீரென தங்கள் வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்ததால் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

நான் இருக்கேன்
மேலும், முதல்வரிடம் தங்கள் கோரிக்கையையும் முன்வைத்தனர். அந்த வீட்டில் இருந்த பெண்மணி, கண்ணீருடன் கோரிக்கையை வைத்தார். அவர்களின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், "தைரியமா இருங்க.. நான் இருக்கேன்.. தேர்தல் முடிஞ்சதும் உங்க கோரிக்கை நிறைவேற்றப்படும்" என உறுதியளித்தார். அதோடு, அமைச்சர் முத்துச்சாமியையும் அழைத்து, அவர்களின் வேண்டுகோளை பரிசீலித்து நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications