கருணாநிதியை அடித்து சாக்கடையில் வீசிய மர்ம கும்பல்.. அதிர்ந்து ஓடி வந்த பெரியார்.. ஸ்டாலின் உருக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி என் உயிருடன் கலந்தது ஏன் தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி என் உயிருடன் கலந்தது என கூறிய முதல்வர் ஸ்டாலின் அதன் பின்னால் இருந்த உருக்கமான கதையை கூறியிருந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசுவும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரித்தார்.

கை சின்னம்
அப்போது அவர் பேசியதாவது: உங்களைத் தேடி வந்திருக்கிறோம். உங்களை நாடி வந்திருக்கிறேன். உங்களிடம் கை சின்னத்தில் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக, காங்கிரஸ் வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிற இளங்கோவனை கைச்சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தர வேண்டும்.

கருணாநிதி பள்ளிப்படிப்பு
கருணாநிதி பள்ளிப்படிப்பை முடித்தது ஈரோட்டில்தான். கல்லூரி படிப்பை முடித்தது காஞ்சிபுரத்தில்தான். அப்படிப்பட்ட வரலாறு நிறைய இந்த ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவனை கை சின்னத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என உங்களை தேடி நான் வந்திருக்கிறேன். கருணாநிதி நாடகம் நடத்துவதற்காக புதுவை சென்றார். அப்போது அந்த நாடகத்தை நடத்தவிடாமல் அங்கிருந்த கலவரக்காரர்கள் நாடகத்தை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துகிறார்கள்.

கருணாநிதி மீது கொலை வெறி தாக்குதல்
இந்த நிலையில் கருணாநிதி கிளம்புகிறார். அப்போது கலவரக் கும்பல் கருணாநிதி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதனால் கருணாநிதி இறந்துவிட்டார் என கருதி சாக்கடையில் வீசி தூக்கியெறிந்துவிட்டு சென்றனர். இந்த செய்தி பெரியாரின் காதுகளை எட்டியது. இதை கேட்ட பெரியார் ஓடோடி வந்து கருணாநிதியை காப்பாற்ற தன் மடியில் படுக்க வைத்து காயம் பட்ட இடத்தில் எல்லாம் மருந்து போட்டார்.

ஈரோட்டிற்கு அழைத்து சென்ற பெரியார்
காயம் போட்ட கையோடு நீ இங்கு இருக்க வேண்டாம், என்னுடன் ஈரோட்டிற்கு வா என அழைத்து வந்து குடியரசு பத்திரிகையல் துணை ஆசிரியர் பணியை வழங்கினார். அப்படிப்பட்ட வரலாற்றுக்குரிய திராவிட இயக்கத்தின் செல்வராக விளங்கியவர் ஈவிகே சம்பத். இந்த பகுதிக்கு பெயர் சம்பத் நகர் என கேள்விப்பட்டேன். சம்பத் நகரில் சம்பத் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். ஈவிகே சம்பத் மகனுக்கு ஓட்டு கேட்டு கலைஞரின் மகன் வந்துள்ளேன்.

திருமகன் ஈவெரா
இந்த இடைத்தேர்தல் எப்படி நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நின்ற தம்பி திருமகன் ஈவெராவை பெருவாரியான வாக்குகளை பெற்று சட்டசபைக்கு அனுப்பினீர்கள். அவர் ஆற்றிய தொண்டு, பேசிய பேச்சு இந்த தொகுதிக்காக அவர் பட்ட பாடு ஆகியவற்றை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். 46 வயதே ஆன இளைஞர் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்த போது திடீரென மரணம் அடைந்துவிட்டார்.

மக்கள் வேதனை
அந்த செய்தி கேட்டு இந்த தொகுதி மக்கள் எல்லாம் மிகுந்த வேதனை அடைந்தனர் என்பதை நான் நன்றாக அறிவேன். எப்போதும் தந்தை இறந்து அந்த இடத்தை பூர்த்தி செய்ய மகன் வருவார். ஆனால் நமது சூழல் யாருக்கும் வரக் கூடாது சூழ்நிலை. மகன் இறந்து தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் வந்துள்ளார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications