மத்திய அரசிடம் ஜெயலலிதா எப்போதும் மண்டியிட்டது இல்லை.. எடப்பாடி பழனிசாமி தான்.. ஆ.ராசா ஆவேசப் பேச்சு
எடப்பாடி பழனிசாமிக்கு துணிச்சல் இல்லை என்று ஆ.ராசா விமர்சித்துள்ளார்.
ஈரோடு: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒருநாளும் மத்திய அரசிடம் மண்டியிட்டதில்லை என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார். ஆனால் அம்மா, அம்மா என்று அழைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதாவின் துணிச்சலில் ஒரு துளி கூட இல்லை என்று ஆ.ராசா விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தெரு தெருவாக சென்று திமுக முக்கிய நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதனிடையே அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்ட போது, நீ சரியான ஆம்பளையா இருந்தா.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா.. நேரா வெளியே வந்து மக்களை சந்தி.

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி
உங்களுக்கு திராணி இல்லை. தெம்பு இல்லை. அதிமுகவை சந்திக்கும் திறமை இல்லை. சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வெளியே வந்து வாக்காளரை சந்தி. அதிமுகவை எதிர்க்கும் சக்தி உனக்கு கிடையாது என்று பேசி இருந்தார். இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆ.ராசா பேச்சு
இந்த பிரச்சாரத்தின் போது ஆ.ராசா பேசுகையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் - ஓபிஎஸ்-க்கும் இடையில் பிரச்சினையென்றால் அண்ணாமலை வந்துதான் தீர்த்து வைக்கிறார். எம்ஜிஆர் தொடங்கிய கட்சி. கருத்து வேறுபாடு இருந்தாலும், மத்திய அரசுக்கு முன் ஜெயலலிதா யாரிடமும் மண்டியிட்டதில்லை. அதனால் தான் கருணாநிதி, ஜெயலலிதாவின் துணிச்சல் பிடிக்கும் என்று கூறினார்.

எங்களுக்கு பயமா?
ஆயிரம் முறை அம்மா என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி, அவரை போல் துணிச்சல் இல்லாமல் இருக்கிறார். அதிமுகவை எதிர்க்க திமுகவுக்கு திராணியில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். நாடாளுமன்றத்தில் மோடியை எதிர்த்து பதில் கூறிவிட்டு நிற்பவன் இந்த ஆ.ராசா. சாதாரண தொண்டனான நான் எடப்பாடி பழனிசாமி கும்பிடும் மோடியை எதிர்க்கிறேன். உங்களை எதிர்ப்பதற்கு எங்களுக்கு என்ன பயமா? இது சாதாரண இடைத்தேர்தல் இல்லை.

மோடி பற்றி ஆ.ராசா
அதானி விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கிறோம். உலகில் எந்த பிரதமராக இருந்தாலும், குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுப்பார்கள். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் என அனைத்து பிரதமர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார்கள். ஆனால் நான்கு வாரமாக அதானி பற்றி கேள்வி எழுப்பியும், பிரதமர் நரேந்திர மோடியால் பதில் அளிக்க முடியவில்லை. அந்த நரேந்திர மோடியின் பாதங்களை கழுவி குடிக்கும் எடப்பாடி பழனிசாமி எங்களை பார்த்து தைரியமில்லை என்கிறார் என்று ஆவேசமாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications