ஏனுங்க.. அது அண்ணா, கருணாநிதி, ஸ்டாலினுங்களா? நேரில் வந்த டூப்புகளை கண்டு வாய் பிளந்த ஈரோடு மக்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் போன்றே வேடம் அணிந்து வந்தவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சார பணிகள் சூடுபிடித்து இருக்கும் நிலையில், இன்று முன்னாள் முதல் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் போன்றே வேடம் அணிந்து வந்தவர்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்ததை பொதுமக்கள் வாய் பிளந்து பார்த்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான திருமகன் ஈவேரா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்த தேர்தல் ஆணையம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

திமுக கூட்டணி
திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் மூத்த தலைவரும் திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவித்து உள்ளது. இதனை அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மற்ற கட்சி வேட்பாளர்கள்
திமுக கூட்டணி கட்சிகளுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளது. இது அல்லாமல் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் அந்த கட்சிகளின் வேட்பாளர்களாக அறிவித்தன. ஆனால், அதிமுகவோ வேட்பாளர்களை அறிவிக்காமல் தாமதம் காட்டி வந்தது.

எடப்பாடி தரப்பு வேட்பாளர்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கே.எஸ்.தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் செந்தில் முருகனையும் அதிமுக வேட்பாளராக அறிவித்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், ஓபிஎஸ் தேர்தலில் இருந்தே விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டார்.

வேட்பாளர் பட்டியல்
ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. இதற்கிடையே டிடிவி தினகரனின் அமமுகவிற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கவில்லை. இதனால் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் அவர் அறிவித்தார். வேட்புமனு பரிசீலனை முடிந்ததை அடுத்து சுயேட்சைகள் உட்பட 77 வேட்பாளர்களை கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

காங்கிரஸ் vs அதிமுக
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழ்நாடு அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின்
தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வரும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வியூகங்களை வகுத்து வாக்குகளை பெற உழைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆகியோரை போன்று வேடம் அணிந்த 3 பேர் ஈரோட்டில் கை சின்னத்துக்காக வாக்கு சேகரித்ததை மக்கள் வாய் பிளந்து பார்த்தனர்.












Click it and Unblock the Notifications