நீங்க ஏன் பணம் தரமாட்டீக்கிங்க? கேள்வி கேட்ட பெண்ணிடம் திமுகவை கோர்த்துவிட்ட ஜெயக்குமார்- ஆஹா
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு போட்டியிட்டுள்ளார். இவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம் செய்தார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவரை திடீரென்று மறித்த பெண், ‛‛எல்லாரும் கொடுக்குறாங்க..நீங்க ஏன் பணம் தரமாட்டீக்கிங்க?'' என கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு ஜெயக்குமார் சிரித்தபடி அங்கிருந்த நழுவிய நிலையில் திமுகவை கோர்த்துவிட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். கடந்த மாதம் அவர் காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸில் களமிஙற்கி உள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தீவிர பிரசாரம்
வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என ஏராளமானவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் திமுக, அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அங்கு முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் குவிந்து வீதிவீதியாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணம் கேட்ட பெண்
அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீதிவீதியாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பெண் ஒருவர் அவரிடம் பணம் கேட்டார். அதாவது வாக்கு சேகரித்து வந்த ஜெயக்குமாரிடம், ‛‛எல்லாரும் கொடுக்குறாங்க..நீங்க ஏன் பணம் தரமாட்டீக்கிங்க?'' என கேள்வி எழுப்பினார்.

திமுகவை கோர்த்துவிட்ட ஜெயக்குமார்
இதை சற்று எதிர்பாராத ஜெயக்குமார் ஒரு நொடி யோசித்தார். இந்த வேளையில் சுதாரித்த நிர்வாகி ஒருவர், ‛‛போம்மா.. போம்மா...'' எனக்கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அங்கிருந்து நடக்க வைத்தார். இந்த வேளையில் அந்த பெண்ணிடம் ஜெயக்குமார், ‛‛திமுக.. திமுக.. தருவாங்க''என கூறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

வீட்டுக்கு ரூ.6 ஆயிரமாம்
அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயக்குமார் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இன்னும் சில தினங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திமுக அரசு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு பணநாயகத்தை செயல்படுத்துகிறது. கடந்த 22 மாதத்தில் கொள்ளையடித்த பணத்தை திமுக வாக்காளர்களிடம் கொடுத்து வருகிறது. ஒவ்வொரு வீட்டுக்கு சென்று கேட்டு பாருங்கள்.. உங்களுக்கு ரூ.6 ஆயிரம் திமுகவினர் தந்தார்களா? என கேளுங்கள். யஷ் என்பார்கள்'' என குற்றம்சாட்டினார்.

சுதீசை தொடர்ந்து ஜெயக்குமாரிடம்..
முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மூதாட்டி ஒருவர்‛‛பணம் கொடுங்கள்.. பணம்.. பணம்'' எனக்கேட்டு அழுதார். இதன் தொடர்ச்சியாக தற்போது பெண் ஒருவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பணம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications