எடப்பாடிக்கு அடுத்த வெற்றி.. ஸ்டார் பேச்சாளர்கள் லிஸ்ட்.. ஓபிஎஸ் டீமுக்கு அனுமதி தராத தேர்தல் ஆணையம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பு நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ஈரோடு: இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பதற்காக அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை ஒபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருதரப்பினரும் வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவெரா திடீர் உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது. திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இரட்டை சின்னத்தில் அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுகிறார்.
இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்த் ஆகியோரும் களம் காண்கின்றனர். குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் கடைசி நேரத்தில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் வாபஸ் பெற்றார். நான்கு முனைப்போட்டி நிலவினாலும் அதிமுகவுக்கும், காங்கிரஸூக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 96 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசிநாளாகும். அன்றைய தினம் சின்னங்கள் ஒதுக்கப்படும்.
இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உட்பட 40 பேர் கொண்ட நட்சத்திர வேட்பாளர் பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது.
அதே போல அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என 40 பேர் கொண்ட பட்டியலும், ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் முக்கிய நிர்வாகிகள் கொண்ட பட்டியலும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் கொடுக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்று விட்டதால் அவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை நிராகரித்து விட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்போம் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூறி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தாக்கல் செய்துள்ள நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications