ஈரோட்டில் தான் படித்த பள்ளிக்கே கலெக்டராக வந்து கலக்கிய வான்மதி.. சத்தியமங்கலத்தில் ஆச்சரிய சம்பவம்
ஈரோடு: பள்ளி பருவத்தில் பெரும்பாலானோரின் ஆசிரியராக வேண்டும் என்ற கனவு இருக்கும்.. அப்படித்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்துகாணி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் தங்கி படித்த பழங்குடியின பெண் ஷீலா, அதே பள்ளிகளுக்கு 23 வருடங்கள் கழித்து தலைமை ஆசிரியராக பணியில் கடந்த மாதம் சேர்ந்தார்.. இப்போது இதுபோலவே ஈரோட்டில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நம்முடைய தமிழகத்தில் எத்தனையோ பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை, அரசு பள்ளியைவிட தனியார் பள்ளிகளில் சேர்க்கவே அதிகமான ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.

நம் மாநிலத்தில் 12000-க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் நிர்ணயிப்பு சட்டம் 2009-கீழ் வரும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இயக்கும் கல்விக் கட்டணம் நிர்ணயக்குழு (Tamil Nadu Private Schools Fee Determination Committee ) வரையறுத்துள்ள கட்டணத்தையே பின்பற்றியும் வருகின்றன.
அசத்தும் அரசு பள்ளிகள்
ஆனால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளும் தரத்திலும், கல்வியிலும் போட்டி போட்டு முன்னேறி வருகிறது.. பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உதவிகள், உணவு உட்பட அனைத்தையுமே நம்முடைய அரசும் செய்து தந்து வருகிறது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தபடியே உள்ளது.
இதோ இந்த சம்பவத்தை பாருங்கள்.. தமிழக அரசு பள்ளியில் படித்த ஒரு மாணவி, கலெக்டராக உயர்ந்துள்ளார்.. அத்துடன், தான் படித்த பள்ளிக்கே வந்து அசத்தியும் உள்ளார்..
கலெக்டராக கலக்கிய வான்மதி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். இவர் ஒரு கார் டிரைவர் ஆவார்.. இவரது மனைவி பெயர் சுப்புலட்சுமி. இவர்களது மகள் வான்மதி. இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தார்.
வான்மதி அப்போது படித்தபோது, பள்ளியில் ஆண்டு விழா நடந்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக கலெக்டராக இருந்த உதயசந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டிருந்தார்.. அப்போது உதயச்சந்திரனுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் உற்சாகமான வரவேற்பும், மரியாதையும் தரப்பட்டது.

உதயச்சந்திரன் முன்னோடி
இதை கவனித்த மாணவி வான்மதி, தானும் ஒரு கலெக்டராக வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டார்.. இந்த ஒற்றை இலக்குடன் படிக்க துவங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவராக வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் பயணித்தார்..
இறுதியில் நன்றாக படித்து, கலெக்டராக தேர்ச்சி பெற்றார். இப்போது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மாவட்டத்தில் கலெக்டராக வான்மதி பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சொந்த ஊரான சத்தியமங்கலத்திற்கு வான்மதி வந்திருந்தார்.. அப்போது தான் படித்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் வருகை தந்திருந்தார்.. வான்மதியை கண்டதுமே, பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செல்போனை குறைத்து கொள்ளுங்கள்
அப்போது வான்மதி மாணவிகளிடம் சொல்லும்போது. "நான் ஒரு கலெக்டரை பார்த்து கலெக்டராக வேண்டும் என லட்சியத்துடன் படித்தேன்.. அதனால்தான் என்னால் கலெக்டராக முடிந்தது.. மாணவிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக்கொண்டால் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியும்.
நீங்களும் நன்கு படித்தால் பல உயரிய பதவிக்கு வரலாம். விடாமல் முயற்சி செய்யுங்கள் என்றார்.. தான் படித்த பள்ளிக்கே கலெக்டராக வந்து வான்மதி கலக்கிய இந்த சம்பவம் ஈரோடு மாவட்ட மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications