எடப்பாடி பழனிசாமியின் அக்கா மகன் அலுவலகத்தில் ஐ.டி ரெய்டு.. 2வது நாளாக சுற்றி வளைத்த அதிகாரிகள்!
ஈரோடு: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை இன்று ரெய்டு நடத்தி வருகிறது. நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை இன்று 2வது நாளாக நீடிக்கிறது.
ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ராமலிங்கம், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் இந்த ராமலிங்கம். பல்வேறு ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறார். ஈரோட்டை தலைமையிடயாகக் கொண்ட ராமலிங்த்தின் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை 2வது நாளாக சோதனை நடத்தி வருகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமியின் அக்கா மகன் வெற்றிவேல் தொடர்புடைய அலுவலகத்திலும் ரெய்டு நடக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தில் என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் என். ராமலிங்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்.
கட்டுமான நிறுவன அதிபர் என்.ராமலிங்கத்தின் இளைய மகனுக்கும், பெருந்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற தொழிலதிபரின் இளைய மகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த சுப்பிரமணியம் வீட்டில் தான் எடப்பாடி பழனிசாமியும் தனது மகனுக்கு பெண் எடுத்துள்ளார்.
இந்நிலையில் என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் சென்னை, ஈரோடு, பெங்களூர் வீடுகள் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனனர். கோவை, சென்னையில் தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான நிறுவனங்கள், எஸ்பிஎல் நிறுவனம் மற்றும் எஸ்.ஆர்.மெட்டல் நிறுனவனத்திலும் சோதனை நடைபெற்றது.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வரும், தற்போதைய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூனாட்சி பகுதியில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் அக்கா மகன் வெற்றிவேல் முதன்மை இயக்குநராக இருக்கும் மரவள்ளி கிழங்கு ஆலை அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று காலை முதல், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications