அல்வா மாதிரி ஈரோட்டுக்கு ஸ்டாலின் தந்த அறிவிப்பு! முதல்வரின் சர்ப்ரைஸ் திட்டங்கள்! ஈரோடு மக்கள் குஷி
ஈரோடு: ஈரோடு, கோவை மாவட்டங்களுக்கு வருகை தந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.. நேற்றைய தினம் கோவை செம்மொழி பூங்காவை திறந்து வைத்துள்ள நிலையில், இன்று நவம்பர் 26ம் தேதி பல்வேறு அரசு விழாக்களில் முதல்வர் பங்கேற்றுள்ளார்.. மேலும், ஈரோடு மக்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது, மிகப்பெரிய மகிழ்ச்சியை அவர்களுக்கு தந்து வருகிறது.
தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஈரோட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்
நேற்றைய தினம் கோவை மாவட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் பங்கேற்றிருந்தார்.. கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் ரூ.208.50 கோடி மதிப்பிலான செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பிறகு பூங்கா வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் மாணவர்கள் , தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
இந்நிலையில், சுற்றுப்பயணத்தின் 2ம் நாளான இன்று ஈரோட்டுக்கு முதல்வர் வருகை தந்துள்ளார்.. காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து தீரன் சின்னமலை மணிமண்டபம் சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார்
நலத்திட்ட உதவிகள்
ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் பங்கேற்றார்.. அங்கு, ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் உட்பட மாவட்டத்தில் முடிவுற்ற ரூ.235 கோடி மதிப்பிலான 970 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும், ரூ.91 கோடி மதிப்பிலான 230 புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தொடர்ந்து, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 304 பயனாளிகளுக்கு ரூ.278.62 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் விழா பேருரையாற்றினார்.
அல்வா போல அறிவிப்புகள்
ஈரோடு மாவட்டத்தில் ரூ.605 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பிறகு மக்களின் நலனுக்காக ஏராளமான நலத் திட்டங்களையும் அறிவித்துள்ளது அம்மாவட்ட மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும். 4.50 கோடியில் அலுவலக கட்டிடங்கள் கட்டித்தரப்படும். புஞ்சை புளியம்பட்டி, கோபிசெட்டிப்பாளையம் நகராட்சிகளுக்கு புதிய அலுவலகங்கள் கட்டித்தரப்படும். சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சட்ட சிக்கல்களை தீர்க்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் 90 கிராம விவசாயிகளின் திட்ட அனுமதி பட்டாக்கள் நிரந்தர பட்டாக்களாக மாற்றப்படும், தோணிமடுவுவில் புதிய தடுப்பணை கட்டப்படும், பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications