எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக பரிந்துரைத்தவர் சசிகலா - மனம் திறந்த செங்கோட்டையன்
சென்னை: ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக பரிந்துரைத்தவர் சசிகலா என்று செங்கோட்டைன் தெரிவித்துள்ளார். மேலும், பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைத் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதா மறைந்தபிறகு, அதிமுகவுக்கு பல்வேறு சோதனைகள் வந்தன. இந்த இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக சசிகலாவை ஒருமனதாக நியமித்தோம். அதன்பின் ஒவ்வொரு தடுமாற்றம் வரும்போதும், தடுமாற்றம் இல்லாமல் நான் செயல்பட்டுள்ளேன். கடந்த காலத்தில் எனது செயல்பாடுகளை ஜெயலலிதா அவர்களே பாராட்டியது அனைவருக்கும் தெரிந்ததே.

அதிமுக இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதால் அனைவரும் சேர்ந்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கினோம். இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதாலேயே நான் அமைதியாக இருந்தேன். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக பரிந்துரைத்தவர் சசிகலா.
2024 இல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும் வேலுமணிகூட இதை ஒருமுறை வெளிப்படுத்தினார். அதன்பின் பொதுச்செயலாளரை சந்தித்து கழகம் தொய்வோடு இருப்பதை எடுத்துரைத்தோம். கழகத்தை ஒன்றிணைக்கவும், வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்கவும் கோரிக்கை வைத்தோம்.
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். வெளியே சென்றவர்கள் எந்த நிபந்தனையும் இல்லை. எங்களை கட்சியில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்த கருத்தை ஏற்க மறுக்கிறார்.
தேர்தல் நெருங்குகிறது அதனால் விரைவில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். பிரிந்தவர்களை சேர்க்கவில்லை என்றால் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை நாங்கள் செய்வோம். வெளியே சென்றவர்களை தேர்தலுக்கு முன் கட்சியில் சேர்க்க வேண்டும். 10 நாட்கள்தான் காலக்கெடு. அதற்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications