புத்தகம் ஏந்த வேண்டிய கையில் துடைப்பம்! அரசு பள்ளி கழிவறையை தூய்மை செய்த மாணவர்கள் -அதிர்ச்சி வீடியோ
ஈரோடு: அரசு பள்ளி கழிவறையை மாணவ, மாணவிகள் தூய்மை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த முள்ளம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மைதிலி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், இப்பள்ளியில் பயிலும் 4 ஆம் வகுப்பு மாணவனும் ஒன்றாம் வகுப்பு பயிலும் அவரது தங்கையும் பள்ளி கழிவறையை தூய்மை செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தினமும் பள்ளிக்கு முதலில் வரும் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கூறியதாக வீடியோவில் இடம்பெற்ற மாணவர்கள் தெரிவித்து உள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவை கண்ட பலர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கு காரணமான பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் உரிய விசாரணை நடத்தி இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்க விடாமல் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாகவும், விசாரணை முடிவடைந்த பின்னர் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
கடந்த மாதம் இதே ஈரோடு மாவட்டம் பெரியூரில் மாணவர்களை தலைமை ஆசிரியை வண்ணம் பூச சொன்ன வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது பள்ளி கழிவறையை மாணவர்கள் தூய்மை செய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications