திருப்பூரில் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள்.. போராடி மீட்ட தீயணைப்பு துறை.. காப்பாற்றியது எப்படி?
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கனமழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்த நிலையில் அங்கே சிக்கித் தவித்த 5 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 15 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் உள்பட 24 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கனமழை
வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை செய்து வருவதால் தண்ணீரில் சிக்கி மக்கள் அல்லல் பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்கள் ஓய்ந்து மக்கள் நிம்மதி அடைந்த நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் அறிவித்தபடியே தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, கிருஷ்ணகிரி, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் கனமழை
அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்துள்ளது. பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான பொங்கலூர், பனப்பாளையம், காமநாயக்கன் பாளையம், அவினாசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை நீடித்தது. மேலும் கனமழை காரணமாக கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
இதற்கிடையே கனமழையால் அவினாசிபாளையத்தில் பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் இருந்த வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் அங்கே வசிப்பவர்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறைக்கும், மாநகராட்சிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வீடு முழுவதும் தண்ணீர் சூழ்ந்துவிட்டதால் ஆபத்தான நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினருடன் காவல் துறையினர் விரைந்தனர்.

பத்திரமாக மீட்பு
பின்னர் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு துறையினர் வீடுகளில் சிக்கியிருந்த சங்கர், பிரியா அவர்களது குழந்தைகளான ஸ்ரீமதி, ஸ்ரீ ஹரி மற்றும் மற்றொரு குடும்பத்தை சேர்ந்த கார்த்திக், கார்த்திகா, மகாலட்சுமி, முத்துச்செல்வம், பிரவீன், பிரனிதா, தர்ஷீத் ஆகியோரை ரப்பர் படகு மூலம் மீட்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications