சிறையில் சந்திரபாபு நாயுடு.. ஜாமீன் மனு மீதான வழக்கு இன்று விசாரணை.. நல்ல செய்தி கிடைக்குமா
ஹைதராபாத்: திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையிலுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.இவரது ஆட்சியில் திறன் மேம்பாட்டுக் கழக திட்டத்தில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது.

திறன் மேம்பாட்டு கழக திட்டத்தில் சுமார் ரூ.371 கோடிக்கு ஊழல் செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.
இந்த வழக்கில் கடந்த மாதம் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் அவருக்கு பிடிவாரணட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது கைதை கண்டித்து அப்போதே அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுக்க போராட்டம் நடத்தினர். ஜாமீன் பெற அவரது தரப்பினர் எடுத்த முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை.
தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், அவர் சிறையிலேயே இருக்க நேர்ந்தது. இதற்கிடையே அவர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்த நிலையில், அந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு வருகிறது. அதை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வெங்கட ஜோதிர்மயி விசாரிக்க உள்ளார்.
முன்னதாக இந்த வழக்கு கடந்த அக். 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கைத் தசரா விடுமுறைக்குப் பிறகு விசாரிக்க விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், இந்த மனுவை தசரா விடுமுறை பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், நீதிபதி அதை ஏற்றுக் கொண்டார். அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில், இதே வழக்கில் தன் மீதான எப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வழக்கில் வரும் நவம்பர் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், அவர் அவர் நவம்பர் 1ஆம் தேதி வரை ராஜமகேந்திராவரம் மத்தியச் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications