எந்தா பழக்கம் சாரே இது.. ஃபுல் போதையில் ஏர்போர்ட்டில் தகராறு! ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன் கைது!
ஹைதராபாத்: கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகரான விநாயகன் ஹைதராபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவா செல்வதற்காக இணைப்பு விமானத்தில் ஹைதராபாத் சென்றபோது குடிபோதையில் சிஐஎஸ்எப் வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் அவர்களை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மலையாளத் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரை உலகிலும் பிரபல நடிகராக அறியப்பட்டவர் விநாயகன். தமிழில் சிலம்பாட்டம், மரியான் ,காளை, திமிரு உள்ளிட்ட படங்களை நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

குறிப்பாக திமிரு படத்தில் அவரது நடிப்பு பலரையும் கவனிக்க வைத்தது. அது மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பெயர் சொல்ல வைக்கும் பல படங்களை அவர் நடித்திருக்கிறார்.
குறிப்பாக 2016ல் அவர் நடித்த கம்மாண்டி படம் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. கங்கா எனும் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு கேரளா அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்று தந்தது. அடிப்படையில் நடன கலைஞரான அவர் தீ நடனத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆடு, ஒருத்தி, ஆடு 2, காசர்கோல்டு, தொட்டப்பன், டிரான்ஸ், ஆபரேஷன் ஜாவா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் மலையாளத்தில் பிரபல நடிகர் அரியப்பட்டார். சிறிது காலம் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் ஜெய்லர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். சிலை கடத்தலில் ஈடுபட்டு இருக்கும் டான் கதாபாத்திரம் அவரை ரசிகர்களிடம் வெகுவாக கொண்டு சென்றது,.
குறிப்பாக மலையாளம் கலந்த அவரது தமிழ் பேச்சு வர்மன் என்ற கேரக்டரை ரசிகர்களை மிரட்டியது என்றே சொல்லலாம். இந்த நிலையில் தான் தற்போது ஹைதராபாத்தில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து கோவா செல்வதற்காக விநாயகன் விமானத்தில் பயணித்திருக்கிறார். இணைப்பு விமானத்திற்காக ஹைதராபாத் சென்றபோது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவரை சோதனை செய்ய முயன்ற சிஐஎஸ்எப் காவலர்களுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஹைதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விநாயகன் சர்ச்சையில் சிக்குவதும், காவல்துறையால் கைது செய்யப்படுவதும் இது புதிதல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் தகராறு செய்ததாக அவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2023 அக்டோபர் மாதம் குடும்ப தகராறு தொடர்பாக எர்ணாகுள, காவல் நிலையத்திற்கு சென்றபோது காவல் நிலையத்தில் மது போதையில் புகை பிடித்ததோடு போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை போலீசார் ஜாமினில் வெளியே விட்டது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமில்லாமல் கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான உம்மன் சாண்டியைப் பற்றி முகநூல் நேரலையில் அவதூறாக பேசினதாக அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. உம்மன் சண்டையில் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விடுமுறை வழங்கியதால் கோபத்தில் அவர் பேசியதாகவும், அதனால் அவரது வீட்டில் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
மேலும், 2019 ஆம் ஆண்டு ஒரு பெண் கவிஞர் குறித்து தரக்குறைவாக பேசிய வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அது மட்டுமில்லாமல் பல பெண்களுடன் நான் உடல் ரீதியான உறவில் இருந்திருக்கிறேன்.. ஆனால் இது 'மீ டூ' குற்றச்சாட்டின் கீழ் வராது என்ற அடித்தட்டு பட பிரஸ்மீட்டில் பேசியதும் இவருக்கு எதிராக பலத்த எதிர்ப்புகளை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications