சாலை முழுக்க பணம்.. எல்லாமே புதிய ரூ.500 நோட்டுகள்.. மிரண்ட போலீஸ்.. நள்ளிரவில் நடந்தது என்ன
ஹைதராபாத்: தெலங்கானாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டிருந்த கும்பலைப் பிடிக்க போலீசார் முயன்ற போது, அவர்களிடம் இருந்து தப்பிக்கக் கொள்ளையர்கள் செய்த சம்பவம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
நமது நாட்டில் திருடர்கள் ஒவ்வொரு காலத்திலும் அந்தந்த டிரெணட்டிற்கு ஏற்ப திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவார்கள். காலத்திற்கு ஏற்ப பாதுகாப்பு அம்சங்கள் அப்டேட் ஆவதை போல அவர்களும் அப்டேட் ஆகி வருகிறார்கள்.
ஏடிஎம் வந்த பிறகு திருடர்களின் கைவரிசை கணிசமாகக் குறைந்த நிலையில், ஆங்காங்கே அந்த ஏடிஏம் இயந்திரங்களையே கொள்ளையடிக்கும் முயற்சிகளும் கூட நடந்து கொண்டு தான் இருக்கிறது.

தெலங்கானா
அப்படியொரு சம்பவம் தான் தெலங்கானாவில் நடந்துள்ளது. அங்கு நள்ளிரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள ஒரு இடத்தில் அமைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தில் குறிவைத்துக் கொள்ளையடிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் ஏடிஎம் இயந்திரம் மீது கை வைத்தவுடன் அலாரம் அலறவிட்டது. இதனால் பக்கத்தில் ரவுண்ட்ஸ் சென்று கொண்டிருந்த போலீசார், உடனடியாக இங்கு விரைந்துள்ளனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத கொள்ளையர்கள் அதன் பின்னர் செய்தது தான் இணையத்தில் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது.

ஏடிஎம் கொள்ளை
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தெலங்கானாவின் ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள ஊர் கொருட்லா. இங்கு ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் தான் ஏடிஎம்மை குறிவைத்து கொள்ளையடிக்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் களமிறங்கியுள்ளது. பக்காவாக பிளாக் போட்டு இறங்கிய இந்த கும்பல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் இந்த கொள்ளை சம்பவத்தை நடத்த முயன்றுள்ளனர்.

என்ன நடந்தது
கொருட்லா நகரில் இருக்கும் அந்த ஏடிஎமில் புகுந்து அவர்கள் நான்கு பேர் திருட முயன்றுள்ளனர்.. ஆனால், அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற போது, திடீரென அதில் இருந்து அலாரம் சத்தம் வரத் தொடங்கிவிட்டது. அங்கு அருகில் தான் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களுக்கும் ஏடிஎம் கொள்ளை குறித்த தகவல் போயுள்ளது. இதையடுத்து ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனே கொள்ளை நடக்கும் ஏடிஎம் மையத்திற்கு விரைந்துள்ளனர்.

சாலையில் பணம்
போலீசாரை பார்த்தவுடன் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர். இதையடுத்து சினிமா பாணியில் அவர்களை போலீசார் விரட்டி சென்றுள்ளனர். போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என்று அஞ்சிய அந்த கும்பல் பணத்தைச் சாலையில் வீசிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டனர்.. ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ₹ 19 லட்சம் ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டதாக ஜக்தியால் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆர் பிரகாஷ் தெரிவித்தார். தப்பியோடிய அந்த கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,












Click it and Unblock the Notifications