"நல்லா தானே இருந்துச்சு.." தெலுங்கானா காங்கிரஸில் எழுந்த திடீர் குழப்பம்.. இப்போ என்ன.. ட்விஸ்ட்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், இப்போது அங்கேயும் காங்கிரஸுக்கு மிகப் பெரிய சிக்கல் வந்துவிட்டது.
இந்தாண்டு இறுதியில் மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதை வெற்றியுடன் அணுக வேண்டும் என்பதால் பல்வேறு கட்சிகளும் இந்த 5 மாநில தேர்தலில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த 5 மாநிலங்களில் தென்னிந்தியாவில் இருந்து தெலுங்கானாவில் தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் நவ. 30இல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதைத் தொடர்ந்து டிசம்பர் 3இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தெலுங்கானா: தெலுங்கானாவைப் பொறுத்தவரை இப்போது அங்கே கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே கேசிஆர் தான் முதல்வராக இருக்கிறார். தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக கேசிஆர் முக்கிய காரணம் என்பதால் அவர் மீது அங்கே மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் இருக்கவே செய்கிறது. இதன் காரணமாகவே கடந்த காலங்களில் கேசிஆர் கட்சியால் ஆட்சியைத் தக்க வைக்க முடிந்தது.
அதேநேரம் இந்த முறை கேசிஆருக்கு சிக்கல் அதிகமாகவே இருக்கிறது. தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதால் மக்களுக்கு அரசு மீது ஒருவித அதிருப்தி மனநிலை உருவாகியுள்ளது. மேலும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், உள்ளூர் தலைவர்கள் மீதான அதிருப்தி உள்ளிட்ட காரணங்கள் கேசிஆருக்கு சிக்கலாக இருக்கிறது. இந்த சூழலைத் தான் தெலுங்கானாவில் காங்கிரஸ் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டது.
அதிகரிக்கும் ஆதரவு: காங்கிரஸ் கட்சி கடந்த சில மாதங்களாகவே தெலுங்கானாவில் தங்கள் கட்சியை வலுப்படுத்தத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது. அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி மாநிலம் முழுக்க பிரசாரம் செய்ய அது காங்கிரஸுக்கு பூஸ்டாக அமைந்தது. மேலும், கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்வைத்த வாக்குறுதிகளும் காங்கிரஸ் ஆதரவை அதிகரித்தது. இப்போது காங்கிரஸ் தெலுங்கானாவில் முழு வீச்சில் தேர்தல் பணிகளைக் கவனித்து வருகிறது.
இதற்கிடையே நேற்று காங்கிரஸ் கட்சி தனது 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் 45 வேட்பாளர்கள் பெயர்கள் உள்ளது.. குறிப்பாக இந்திய கிரிகெட் டீமின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் ஹைதராபாத்தில் இருக்கும் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியில் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாட்செர்லா தொகுதி வேட்பாளராக அனிருந்த் ரெட்டியும், முனுகோட்டில் கே ராஜ் கோபால் ரெட்டியும், வனபர்த்தி தொகுதியில் ஜெ சின்னா ரெட்டியும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர் பட்டியல்: இந்த லிஸ்டில் மொத்தம் 45 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் 119 இடங்கள் இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி இப்போது வரை 100 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.. இதுவரை தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி நல்ல நிலையிலேயே சென்று கொண்டிருந்த நிலையில், இப்போது திடீரென அங்கே பிரச்சினை எழுந்துள்ளது. வழக்கம் போலக் காங்கிரஸில் உட்கட்சி பூசல் கிளம்பியுள்ளது.
அதிலும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், அங்கே காங்கிரஸ் வட்டாரத்தில் மிகப் பெரிய அதிருப்தி கிளம்பியுள்ளது. ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டிய விஷ்ணுவர்தன் ரெட்டி, சலமல்லா கிருஷ்ணா ரெட்டி (முனுகோட்), எர்ரா சேகர் (ஜட்சர்லா), மேகா ரெட்டி (வனபர்த்தி) உள்ளிட்டோர் சீட் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும், அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
புது சிக்கல்: காங்கிரஸைப் பொறுத்தவரை அவர்களுக்கு பெரும்பாலான நேரத்தில் பிரச்சினை வெளியே இருந்து வராது. அவர்களுக்குள் உள்ளே இருந்தே பிரச்சினை கிளம்பும். அதேபோன்ற ஒரு சூழல் மீண்டும் இப்போது தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ளது. அங்கே காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், இந்த குழப்பம் காங்கிரசுக்குத் தலைவலியைத் தருகிறது.
தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், அதிருப்தி தலைவர்கள் வேறு கட்சிக்குத் தாவினால் அது காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இதனால் நிலைமையைச் சமாளிக்க அதிருப்தி தலைவர்களைச் சமாளிக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications