பயங்கரவாத முகாம்:ஆந்திரா, தெலுங்கானாவில் பாப்புலர் பிரண்ட்-ன் 23 இடங்களில் சோதனை- 4 பேர் அதிரடி கைது
ஹைதராபாத்: பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்ததாக குற்றம்சாட்டி ஆந்திரா, தெலுங்கானாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான 23 இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பான விசாரணைகளில் Popular Front of India - PFI அமைப்பின் இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அண்மையில் இத்தகைய சோதனை நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆந்திரா, தெலுங்கானாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் வீடுகள், அலுவலகங்கள் என 23 இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் ஷாகித், என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது இந்த சோதனையில் பாஸ்போர்ட், வங்கி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஹைதராபாத்துக்கு விசாரணைக்கு வருமாறு ஷாகித்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக இலியாஸ் என்பவர் மாயமாகிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார்? என விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், சந்தேகத்துக்குரிய இடங்களில் சோதனைகள் மேற்கொண்டனர். நெல்லூர் காஜாநகரில் இலியாஸ் டிபன் கடை ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் இன்று மொத்தம் 23 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஆயுதங்கள், ஆவணங்கள், கணிணி பதிவுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் இன்றைய சோதனையின் போது 4 பேரை கைது செய்தனர். இன்றைய சோதனையும் கைது நடவடிக்கைகளும், பயஙகரவாத இயக்க முகாம்கள் நடத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சதித் திட்டம் தீட்டியது என்கிறது தேசிய புலனாய்வு ஏஜென்சி வட்டாரங்கள்.
தெலுங்கானா, ஆந்திராவில் கடந்த சில மாதங்களாக இது தொடர்பாக சோதனைகளும் விசாரணைகளும் நடத்தப்பட்டு வந்தன. இந்த விசாரணைகளின் அடிப்படையில் கூடுதலாக இன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications