அள்ள அள்ள தங்கம்.. கோடிகளை குவித்த அரசு அதிகாரி ஜகஜோதி.. லஞ்சத்தால் சிக்கிய உடன் ஜகஜால நாடகம்
ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் அரசு கட்டுமான பணி டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரரிடம் ரூ.84,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவர் கைதான போது, தான் இனி மேல் லஞ்சமே வாங்க மாட்டேன் என்று கண்ணீருடன் கெஞ்சினார். அவரிடம் ரூ.65 லட்சம் ரொக்கம் 3.64 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கங்காதர் என்பவர் அரசு பணிகளை டெண்டர் எடுத்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். கங்காதர் அண்மையில் பழங்குடியினர் நலவாரியத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசு ஆண்கள் விடுதி டெண்டரில் வென்றதுடன், அரசுடன் போட்ட ஒப்பந்தப்படி, நிஜாமாபாத்தில் ஆண்கள் அரசு விடுதியை கட்டி முடித்திருக்கிறார்.

இது தவிர ஹைதராபாத் நகரின் காஜுல ராமாரத்தில் பழங்குடியின மாணவர்களுக்காக அரசு விடுதி கட்டும் ஒப்பந்தத்தையும் எடுத்திருக்கிறார் . இதனிடையே நிஜாமாபாத்தில் ஏற்கெனவே கட்டி முடித்த பணிக்கான நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்று ஹைதராபாத் நகரில் உள்ள பழங்குடியின நலப்பிரிவு வாரியத்தில் செயற்பொறியாளராக உள்ள ஜகஜோதியிடம் கங்காதர் முறையிட்டார். அதற்கு அவர் 2 டெண்டர்களை எடுத்துள்ளீர்கள் என்பதால், ரூ.1 லட்சம் கொடுத்தால் பில் தொகையை வழங்குவேன் என கூறினாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கங்காதர், ஹைதராபாத் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகம் சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கடந்த திங்கள் அன்று மாலை, போலீசார் அளித்த பணத்துடன் கங்காதர் பழங்குடி நலவாரிய அலுவலகத்திற்கு போயிருக்கிறார். அங்கு எஸ்டி பிரிவு அதிகாரி ஜகஜோதியிடம் ரூ.1 லட்சத்தில் சற்று குறைக்கும் படி பேரம் பேசியிருக்கிறார். பேரம் பேசி இறுதியாக ரூ. 84 ஆயிரம் வழங்குமாறு ஜகஜோதி கூறியிருக்கிறார். அப்பணத்தை கங்காதரிடம் இருந்து ஜகஜோதி வாங்கினார் அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ஜகஜோதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்கள். கைதான ஜகஜோதி தான் இனி மேல் லஞ்சமே வாங்க மாட்டேன் என்று கண்ணீருடன் கெஞ்சியதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஜகஜோதி வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர் அதில் கணக்கில் வராத ரூ.65 லட்சம் ரொக்கம், 3.64 கிலோ எடை கொண்ட தங்க நகைகள், சில சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
ஜகஜோதிக்கு ஏராளமான ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் உள்பட சுமார் ரூ.15 கோடியில் சொத்துகள் இருப்பது தெரியவந்தது. இதனிடையே கைதான ஜகஜோதி தனக்கு நெஞ்சு வலிப்பதாக அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். உடனே அவரை ஹைதராபாத் உஸ்மானியா அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சைக்கு பிறகு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications