ஆந்திரா சின்னாபின்னமாகுது.. கண் முன்னே இளைஞரை அடித்துச் சென்ற வெள்ளம்.. அதிர்ச்சி வீடியோ!
ஹைதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் இளைஞர் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி காண்போரை பதைபதைப்புக்கு உள்ளாக்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் மழை, வெள்ளத்தால் 8 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா, தெலுங்கானாவில் தொடர் கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஆந்திராவின் விஜயவாடா, குண்டூர் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விஜயவாடாவில் 18 செ.மீ மழை பதிவானது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், இன்று மங்களகிரி தொகுதியில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அரசு மேற்கொண்டுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மங்களகிரி நகரில் உள்ள ரத்னல் செருவு பகுதியில், அமைச்சர் நாரா லோகேஷ் சுற்றுப்பயணம் செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என அப்பகுதி மக்களுக்கு அமைச்சர் உறுதி அளித்தார்.
இதற்கிடையே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வுக் கூட்டம் நடத்தி, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தினார்.
விஜயவாடா பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், வெள்ள நீரில் சிக்கி இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை காப்பாற்ற முயன்ற நபரும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் ஒரு மரத்தைப் பிடித்து தப்பி உள்ளனர். அவர்களை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கயிறுகட்டி இழுத்து மீட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications