திட்டிய தாய்.. வீட்டைவிட்டுச் சென்ற சிறுமி.. கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. ஜோத்பூரில் கொடூரம்
ஜெய்பூர்: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில், ஜோத்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் மத்தியில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்தே யாரும் மீளவில்லை. அதற்குள் அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி பதற்றத்தை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கின்றன.

உத்தரகாண்ட் செவிலியர் பாலியல் வன்கொடுமை கொலை, மருத்துவமனைக்குள் செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை, கேரளத்தில் நோயாளி இருவரை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர், மகாராஷ்டிர மாநிலம், தானேவில் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் என ஒவ்வொரு நாளும் குற்றச் சம்பவங்களுடன்தான் விடியும் அவலம் உள்ளது.
இந்நிலையில்,ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியில் சிறுமியை மருத்துவமனை வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இந்த சிறுமியை அவரது தாய் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, சிறுமி எங்கே போவதென்று தெரியாமல் ஜோத்பூர் அரசு மருத்துவமனையின் வளாகத்தில் தனியாக அமர்ந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, தனியாக அமர்ந்திருந்த சிறுமியிடம் இரண்டு நபர்கள் வந்து பேச்சுக் கொடுத்துள்ளனர். பின்னர், அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள மருத்துவக் கழிவு கிடங்குப் பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அந்த இரண்டு நபர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு திங்கள்கிழமை மாலையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உதவி காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜோத்பூரில் தாய் திட்டியதால் 14 வயது சிறுமி ஒருவர் வீட்டை விட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியேறியுள்ளார். இதையடுத்து, அந்த சிறுமியை பெற்றோர் நீண்ட நேரம் தேடியுள்ளனர். ஆனால், அவரை எங்கு தேடியும் காணவில்லை. நீண்ட நேரமானதால் சூரசாகர் காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து ஞாயிற்றுக்கிழமை மாலையில் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியாக அமர்ந்திருந்த சிறுமியை மருத்துவமனையின் பின்புறம் உள்ள மருத்துவக் கழிவு கொட்டும் பகுதிக்கு அழைத்துச் சென்று இரண்டு நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி திங்கள்கிழமை பிற்பகலில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது வெளியில் வந்துள்ளது என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலை விசாரணை மேற்கொண்டனர். மருத்துவக் கழிவுகளை கொட்டும் கிடங்கை தடயவியல் நிபுணர்கள் சோதனையிட்டு அப்பகுதியில் இருந்த ஆதாரங்களை சேகரித்தனர். இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக மருத்துவமனையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஜோத்பூரில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications