ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து : நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் மரணம்
நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதில் மூச்சுத்திணறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்ட விபத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜனை மாற்றியபோது விபத்து நேரிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சையின் போது ஆக்சிஜன் தடை பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2023 பேர் உயிரந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகள் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் வாயுவை அந்தந்த மருத்துவமனைகளிலேயே சேமித்து வைத்து அங்குள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாயு சிலிண்டர் மூலம் பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மகராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாசிக்கில் உள்ள ஜாகீர் ஹூசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு டேங்கரில் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த மருத்துவமனையில் இன்று டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு சிலிண்டர்களுக்கு மாற்றப்படும் போது எதிர்பாராத விதமாக கசிவு ஏற்பட்டது. டேங்கரில் இருந்த ஆக்சிஜன் வாயு பெருமளவு கசிந்தது. இதனால், அந்த மருத்துவமனையை சுற்றியும் ஆக்சிஜன் வாயு புகை மண்டலமாக காட்சியளித்தது.

இந்த விபத்தில் 22 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். விபத்து குறித்து மாநில சுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் டேங்களில் இருந்து வெளியான ஆக்சிஜன் வாயு கசிவை போராடி கட்டுப்படுத்தினர். டேங்கரின் வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வாயு கசிவு விபத்தில் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர் இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 24 பேராக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழந்த நிலையில் நாசிக்கில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 24 பேர் மரணமடைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
