குஜராத்தில் விஸ்வரூபம்! பாஜக, காங்., அஸ்திரத்தை கையில் எடுத்த ஆம் ஆத்மி - இறங்கி களமாடும் கெஜ்ரிவால்
காந்திநகர்: குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் இதுவரை கையாண்ட வெவ்வேறு அரசியல் ஆயுதங்களை இந்த முறை ஆம் ஆத்மி தனது கையில் எடுத்து களமாடி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வல்லவனுடன் மோதல் பலம் இருந்தால் மட்டும் போதாது.. தந்திரமும் அவசியம் என்பதை அர்விந்த் கேஜ்ரிவால் நன்றாக புரிந்துகொண்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதலில் ஆம் ஆத்மியை சாதாரணமாக நினைத்து வந்த பாஜகவும், காங்கிரஸும், இன்று அக்கட்சி எடுத்துள்ள விஸ்வரூபத்தை பார்த்து அச்சமடைய தொடங்கியுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான ட்ரெய்லர்..
இன்று ஒட்டுமொத்த நாடே உற்று நோக்கும் தேர்தலாக குஜராத் சட்டமன்றத் தேர்தல் மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. 2024 மக்களவைத் தேர்தலுக்கான 'ட்ரெய்லர்' ஆகவே இந்த குஜராத் தேர்தல் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு கிடைக்கும் 'ரிசல்ட்' தான், மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் குஜராத் தேர்தலில் வெற்றி பெறுவதை விட, அதிக தொகுதிகளை கைப்பற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கோட்டை என வர்ணிக்கப்படும் குஜராத்தில், பாஜகவுக்கு சிறு விரிசல் ஏற்பட்டாலும், மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

நிறம் மாறிய கேஜ்ரிவால் - அலறிய பாஜக
இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தான், பாஜக அங்கு மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறது. தனக்கு எதிரி பழைய காங்கிரஸ் தான் என அக்கட்சி நினைத்துக் கொண்டிருந்த வேளையில்தான், குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி குதித்துள்ளது. முதலில், ஆம் ஆத்மியை பார்த்து பாஜக கொஞ்சம் கூட பயப்படவில்லை. ஏனெனில், டெல்லி, பஞ்சாபில் செல்லுப்படியான ஆம் ஆத்மியின் அரசியல், குஜராத்தில் தவிடுப்பொடியாகி விடும் என பாஜகவுக்கு நன்றாக தெரியும். இதனால் ஆம் ஆத்மியை அக்கட்சி ஒரு பொருட்டாக பார்க்கவில்லை. வெறும் 'டெல்லி மாடல்', 'பள்ளிக்கூடம்' என கத்திவிட்டு அக்கட்சி காணாமல் போய்விடும் என பாஜக எதிர்பார்த்தது. காங்கிரஸும் அப்படித்தான் நினைத்தது. ஆனால், குஜராத்தில் களமிறங்கியதுமே தனது நிறத்தை ஆம் ஆத்மி மாற்றிக்கொண்டதை பாஜகவும், காங்கிரஸும் எதிர்பார்க்கவில்லை.

வாள் ஏந்திய ஆம் ஆத்மி..
குஜராத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், வெறும் வளர்ச்சி பிரச்சாரம் மட்டும் போதாது என்பதை கடந்த தேர்தலிலேயே உணர்ந்துவிட்ட கேஜ்ரிவால், இந்த முறை ஆம் ஆத்மியின் கையில் இருந்த துடைப்பத்தை தூக்கி வீசிவிட்டு வாளையும், கோடாரியையும் கையில் ஏந்தியுள்ளது. ஆம்., இதுவரை குஜராத்தில் பாஜக செய்து வந்த மத அரசியல், காங்கிரஸ் கையாண்டு வந்த ஜாதி அரசியல் ஆகிய இரண்டையும் தனது கையில் ஏந்தி ஆக்ரோஷமாக மாறியிருக்கிறது ஆம் ஆத்மி.

காவி உடை அணிந்த கேஜ்ரிவால்..
என்னதான் வளர்ச்சி, கல்வி என தொண்டை கிழிய பேசினாலும், பாஜகவின் இந்துத்துவா கோஷத்துக்கு முன்னால் தனது பேச்சு எடுபடவில்லை என தெரிந்துகொண்ட ஆம் ஆத்மி, பாஜகவுக்கு போட்டியாக காவி அரசியலை கையில் எடுத்துள்ளது. ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி படங்களை அச்சிட வேண்டும் என்ற கேஜ்ரிவாலின் பேச்சுக்கு குஜராத் மக்களிடத்தில் ஏகோபித்த வரவேற்பு காணப்படுகிறது. கேஜ்ரிவால் இப்படியொரு நிலைப்பாட்டை எடுப்பார் என பாஜக சிறிது கூட எதிர்பார்க்கவில்லை.

காங்கிரஸை வீழ்த்த ஜா'தீ' ஆயுதம்
அதேபோல், காங்கிரஸை வீழ்த்த அதன் ஆயுதமாகன ஜாதி அரசியலையே எடுத்துள்ளது ஆம் ஆத்மி. சத்திரியர்கள், தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள் ஆகியோரின் வாக்குகளை குறிவைத்துதான் குஜராத்தில் காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது. இந்த முறை ஆம் ஆத்மி மேற்கண்ட வகுப்பினரை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. அது தனது முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள இசுடா காட்வியும் சத்திரிய இனத்தைச் சேர்ந்தவர்தான். அதுபோல, இந்துத்துவா கோஷத்தை எழுப்பினாலும் அது முஸ்லிம்களுக்கும், தலித்துகளுக்கும் உறுத்தாமல் இருப்பதையும் அர்விந்த் கேஜ்ரிவால் உறுதி செய்து வருகிறார். எனவேதான், குஜராத்தில் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்க்கட்சி இடத்தை ஆம் பிடித்திருப்பதாக தேர்தல் கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், இந்த பாணியில் காய் நகர்த்தினால் பாஜகவையை ஆம் ஆத்மி வீழ்த்திவிடும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications