3 மணி நேரத்துக்கு முன்பே ஏர்போர்ட்டுக்கு வாங்க.. லேடர் பாயிண்ட் செக்கிங் கட்டாயம்.. பறந்த உத்தரவு!
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக விமானப் பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், லேடர் பாயிண்ட் செக்கிங் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கி பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால், பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவங்களால் இந்திய எல்லை மாநிலங்களில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக எல்லை ஓரங்களில் உள்ள ஸ்ரீநகர், சண்டிகர், அமிர்தசரஸ், ஹல்வாரா, பாட்டியாலா, சிம்லா, கங்ரா, பட்டின்டா, ஜெய்சால்மர், ஜோத்பூர் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விமானப் பயணிகள், விமான நிலையங்களுக்கு 3 மணி நேரத்திற்கு முன்பே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவுப்படி, விமான நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட இருப்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு சோதனைகள் அதிகரித்துள்ளதால், விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டுகளை கட்டணமின்றி ரத்து செய்யலாம் என்று ஏர் இந்தியா உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள், பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையங்களுக்கு வருமாறு பயணிகளை அறிவுறுத்தின.
கூடுதலாக, சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகம் (BCAS), விமான நிலையங்களின் முனையக் கட்டிடத்திற்குள் பார்வையாளர்கள் நுழைவதைத் தடை செய்துள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக அனைத்து விமானங்களுக்கும் இரண்டாம் நிலை சோதனையை (secondary ladder point checking) கட்டாயமாக்கியுள்ளது. லேடர் பாயிண்ட் செக்கிங் என்பது விமானத்தில் ஏறுவதற்கு சற்று முன்பு பயணிகளையும் அவர்களின் கைப் பைகளையும் மீண்டும் சரிபார்ப்பதைக் குறிக்கிறது. இது முதன்மை பாதுகாப்பு சோதனைகளுக்கு கூடுதலாகும்.
ஜம்முவையும் மேற்கு எல்லைக்கு அருகிலுள்ள பல இராணுவ நிலையங்களையும் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications